புதுச்சேரி அருகே 7 பவுன் நகை மற்றும் கடனை அடைப்பதற்காக, குடும்ப நண்பரான பெண் ஒருவரின் கண்களைத் துணியால் கட்டி, சினிமா பாணியில் அடித்துக் கொலை செய்த கணவன் – மனைவியை லாஸ்பேட்டை போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர்.


ரத்த வெள்ளத்தில் பிணம்
புதுச்சேரி அடுத்த லாஸ்பேட்டை கருவடிக்குப்பத்தைச் சேர்ந்தவர் மணி (48). இவர் அப்பகுதியில் சிறிய ஓட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். இவரது மனைவி ரமணி (43). நேற்று மணி வியாபாரத்துக்காகக் காய்கறி வாங்கப் பெரியமார்க்கெட் சென்றிருந்த நேரத்தில், ரமணி ஓட்டல் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்குத் திரும்பியுள்ளார்.
காய்கறி வாங்கிவிட்டு வீட்டிற்கு வந்த மணி, கதவு திறந்துகிடப்பதைப் பார்த்துக் அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் சிதறிக்கிடந்தன. வீட்டின் பின்புறத்தில் உள்ள சிறிய சந்தில் ரமணி ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்துள்ளார். மணியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக லாஸ்பேட்டை போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர்.
நகைக்காக நடந்த கொலை
சம்பவ இடத்திற்கு வந்த இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார், உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ரமணியின் தலை மற்றும் முகத்தில் கத்திரிக்கோலால் சரமாரியாகக் குத்தப்பட்டும், கழுத்து நெரிக்கப்பட்டும் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. மேலும், அவர் அணிந்திருந்த 6 பவுன் தங்கச் செயின் மற்றும் காது கம்மல் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
வீட்டுக்கு வழக்கமாக வந்து செல்பவர்களே இக்கொலையைச் செய்திருக்க வேண்டும் எனச் சந்தேகித்த போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், ரமணியின் அக்கா மகனின் நண்பரான பிரவீன்குமார் என்பவர் சம்பவத்தன்று வீட்டிற்கு வந்து சென்றது தெரியவந்தது.
மருத்துவமனையில் நாடகம்; போலிசில் சிக்கினார்!
இதனிடையே, அரசு மருத்துவமனையில் உறவினர்களுடன் சேர்ந்து பிரவீன்குமாரும் அழுதுகொண்டிருந்தார். ஆனால், அவரது நடத்தையில் சந்தேகமடைந்த போலீசார், அவரைத் தனியாக அழைத்துத் தங்கள் பாணியில் விசாரணை நடத்தினர். அதில், அவரும் அவரது மனைவியும் சேர்ந்து நகைக்காக ரமணியைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
நடுங்க வைக்கும் வாக்குமூலம்
கைதான பிரவீன்குமார் அளித்த பரபரப்பு வாக்குமூலத்தில் தெரிவித்ததாவது:
“நான் ஆன்லைன் உணவு டெலிவரி வேலை செய்து வருகிறேன். எனக்குக் கடன் சுமை அதிகமானது. இதனால், ரமணி வீட்டில் தனியாக இருக்கும் நேரத்தைப் பயன்படுத்தி நகைகளைக் கொள்ளையடிக்கத் திட்டமிட்டேன்.
சம்பவத்தன்று நானும் என் மனைவி ஈஸ்வரியும் புதுப்புடவை ஒன்றை வாங்கிக்கொண்டு ரமணி வீட்டிற்குச் சென்றோம். அவருக்குச் ‘சர்ப்ரைஸ்’ கொடுப்பதாகக் கூறி, அவரது கண்களைத் துணியால் கட்டி வீட்டின் பின்புற சந்திற்கு அழைத்துச் சென்றோம். அங்கு வைத்து மரக்கட்டையால் தலையில் அடித்தோம். அவர் நிலைதடுமாறித் தப்பிக்க முயன்றபோது, கத்திரிக்கோலால் சரமாரியாகக் குத்திக் கொன்றுவிட்டு நகைகளை எடுத்துக்கொண்டு தப்பினோம். சந்தேகம் வராமல் இருக்க மருத்துவமனைக்கும் வந்தேன்; ஆனால் மாட்டிக்கொண்டேன்.”
இதையடுத்து நாவற்குளம் பகுதியைச் சேர்ந்த பிரவீன்குமார் (24) மற்றும் அவரது மனைவி ஈஸ்வரி (21) ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட 7 பவுன் நகைகளை மீட்டனர். பள்ளி, கல்லூரிக்குக் குழந்தைகள் சென்றிருந்த நேரத்தில் நடந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை காசிமேட்டில் அலைமோதிய மீன் பிரியர்கள்- விலை குறைவினால் பொதுமக்கள் மகிழ்ச்சி
