spot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்பைக் கொள்ளையர்கள் சிக்கியது எப்படி?

பைக் கொள்ளையர்கள் சிக்கியது எப்படி?

-

- Advertisement -

தமிழ்நாடு-ஆந்திர எல்லையில் இருசக்கர வாகனங்களை திருடி சட்டவிரோத கும்பலுக்கு விற்பனைச் செய்துவந்த இருவர் சிக்கினர்.

திருட்டில் ஈடுபட்டவர்களை கையும் களவுமாகப் பிடித்து கைது செய்து சிறையில் அடைத்தது போலீஸ். தலைமறைவான மற்றொருவரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

திருடப்பட்ட இருசக்கர வாகனங்கள் ஆந்திராவில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் கும்பலுக்கு விற்பனை செய்தது விசாரணையில் அம்பலம்.

we-r-hiring

தமிழ்நாடு-ஆந்திர எல்லை சுற்றுவட்டாரத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக இருசக்கர வாகனங்களை திருடி வந்த வந்த பைக் கொள்ளையர்கள் சிக்கியது எப்படி?

வேலூர் மாவட்டம், குடியாத்தம் சுற்றுவட்டாரங்களில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் திருடப்பட்டு வந்தன.

காணாமல் போன இரு சக்கர வாகனங்கள் குறித்த புகார்கள் குவியவே, குடியாத்தம் டி.எஸ்.பி ராமமூர்த்தி தலைமையிலான நகர போலீஸார், குடியாத்தம் அரசு மருத்துவமனை உட்பட முக்கிய இடங்களில் பொருத்தப்பட்டிருக்கும் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

அப்போது, ஒரு குறிப்பிட்ட நபர் பைக்குகளை திருடுவது தெரியவந்தது. போலீஸார், அந்த நபரை ரகசியமாக கண்காணித்து வந்த நிலையில், கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு விலையுயர்ந்த புதிய பைக் ஒன்றை அவர் திருட முயன்றபோது கையும் களவுமாக போலீசில் சிக்கினார்.

போலீசார் நடத்திய விசாரணையில், குடியாத்தம் தாடி அருணாச்சலம் தெருவைச் சேர்ந்த தரணி(33) என்பதும், இவர் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக 200க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை லாவகமாக திருடி விற்பனைச் செய்திருப்பதும் தெரியவந்தது.

திருடும் பைக்குகளை குடியாத்தம் அடுத்திருக்கும் கள்ளூர் பகுதியைச் சேர்ந்த ஞானவேல்(38) என்பவரிடம் கொடுத்து ஆந்திர மாநிலப் பகுதிகளில் விற்பனைச் செய்ததாகவும் பிடிபட்ட தரணி கூறியிருக்கிறார்.

ஒரு இருசக்கர வாகனத்தை திருடி கொடுத்தால் 3 ஆயிரம் ரூபாய் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை தரணிக்கு ஞானவேல் வழங்கி வந்துள்ளார்.

இதையடுத்து, ஞானவேலையும் கைதுசெய்த போலீஸார், அவரிடமிருந்து திருடப்பட்ட 10 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர். கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக திருட்டுத் தொழிலில் ஞானவேல் தலைமையிலான கும்பல் செயல்பட்டு வந்திருப்பதும் விசாரணையில் அம்பலமாகி உள்ளது.

வேலூர் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை ஒட்டி பல்வேறு இடங்களில் எருது விடும் விழாக்கள் நடைபெற்றன. இந்த விழாவை காண வரும் பார்வையாளர்களின் இருசக்கர வாகனங்கள் பல்வேறு ஊர்களில் திருடுபோயின. இந்த திருட்டு சம்பவங்களிலும் ஞானவேல் தலைமையிலான கும்பல் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த ஒரு மாதத்தில் மட்டுமே 50-க்கும் அதிகமான திருட்டு இருசக்கர வாகனங்களை விற்பனைச் செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.

தமிழ்நாடு-ஆந்திரா எல்லையில் குடியாத்தம் அமைந்திருப்பதால், இருமாநில கஞ்சா மற்றும் சாராய கும்பலுடனும், செயின் பறிப்பு கொள்ளையர்கள் உள்ளிட்ட சட்ட விரோத கும்பலுடன் ஞானவேல் தொடர்பில் இருந்ததையும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இந்த பைக் திருட்டுத் தொழிலுக்குப் பின்னால், குடியாத்தத்தில் பணியாற்றும் காவலர்கள் சிலர் மாமூல் வாங்கிக்கொண்டு உடந்தையாக செயல்பட்டதாக தெரிகிறது.

திருடும் இருசக்கர வாகனங்களை சட்டவிரோத கும்பலுக்கு விற்பனைச் செய்தே லட்சக்கணக்கிலான மதிப்பு சொத்துகளை வாங்கி குவித்திருப்பதாகவும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் தப்பிய மற்றொருவரை தனிப்படை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

கைதுசெய்யப்பட்ட ஞானவேலையும், அவர் கூட்டாளி தரணியையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, வேலூர் மத்திய சிறையில் போலீஸார் அடைத்தனர். செய்தியாளர் என்ற போர்வையில் இருசக்கர வாகனங்களை திருடி வந்த சம்பவம் பொது மக்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

 

MUST READ