யானை கவுனி பகுதியில் நகை பட்டறையில் புகுந்து நகை வாங்குவது போல நடித்து கடை உரிமையாளரை தாக்கி 80 சவரன் நகைகளை இரண்டு நபர்கள் கொள்ளை அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டவர் ஜெகதீஷ் (35) சென்னை பாரிமுனு நாட்டுப் பிள்ளையார் கோவில் தெருவில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். சென்னை யானை கவுனி வெங்கட்ராயன் தெருவில் லக்கரம் கோல்ட் ஸ்மித் என்கிற பெயரில் நகை பட்டறை வைத்து சொந்தமாகவும் மற்றும் ஆர்டரின் பெயரில் தங்க கட்டிகள் பழைய தங்க நகைகளை வாங்கி புதிய நகைகளாக செய்து விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று ஜெகதீஷ் கடையில் இருந்த போது அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர்கள் தங்களுக்கு தங்க நாணயங்கள் செய்து தர வேண்டும் என கேட்டுள்ளனர். அதற்கு முன்பாக ஏற்கெனவே செய்து வைத்திருக்கும் தங்க நாணயங்கள் ஏதேனும் டெமோ இருந்தால் காண்பிக்கும்படியும் கேட்டுள்ளனர். வாடிக்கையாளர் கேட்கிறார் என்கிற எண்ணத்தில் தன்னிடம் இருந்த தங்க நாணயங்களை எடுத்து வந்து காண்பித்துள்ளார்.
திடீரென அடையாளம் தெரியாத இரு நபர்கள் ஜெகதீஷை திடீரென தாக்கி உள்ளனர். கடையில் உள்ள இருந்த இரும்பு கம்பியால் அவரது காலில் அடித்துள்ளனர். பேக்கில் வைத்திருந்த ஸ்பிரே ஒன்றை எடுத்து முகத்தில் அடித்துள்ளனர். இதனால் மயக்கமுற்ற நிலைக்கு சென்ற ஜெகதீஷை, அவர் அணிந்திருந்த பெல்ட்டை எடுத்து அவரது கழுத்தை இறுக்கி கடையில் இருந்த டேபிளில் கட்டிவிட்டு, கடையில் இருந்த 80 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 800 கிராம் (80 சவரன்) நகைகளை கொள்ளையடித்துவிட்டு தப்பி சென்றுள்ளனர்.

மேலும் அந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்களும் கடையில் இருந்த சிசிடிவி கேமரா அடித்து நொறுக்கிவிட்டு காட்சிகள் பதிவாகும் டி வி ஆர் ஐ கையோடு எடுத்துச் சென்றுள்ளனா். மயக்கம் தெளிந்த ஜெகதீஷ் பெல்டில் கட்டி இருந்ததை அவிழ்த்து விட்டு வெளியே வந்து நடந்த சம்பவங்களை அக்கம் பக்கத்தில் கடை நடக்கும் நபர்களிடம் தெரிவித்துள்ளார். இதனை கேள்விப்பட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி சென்று பிடிப்பதற்குள் இரண்டு நபர்களும் சம்பவ இடத்தில் இருந்து தப்பி சென்று விட்டனர். அடையாளம் தெரியாத இரு நபர்கள் தாக்கியதால், பாதிப்படைந்த ஜெகதீஷை அவரது தம்பி சேத்தான் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொண்டு சென்று சேர்த்துள்ளார்.
பின்பு இதுகுறித்து யானை கவுனி காவல் நிலையத்தில் ஜெகதீஷ் தம்பி சேத்தன் தகவல் தெரிவிக்கவே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கைரேகை நிபுணர்களை அழைத்து வந்து கடையில் ஆய்வு செய்து முக்கிய தடையங்களை சேகரித்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து யானை கவுனி போலீசார் வழக்கு பதிவு செய்து அருகில் இருந்த அக்கம் பக்கத்தில் உள்ள கடைகளின் சிசிடிவி கேமரா காட்சிகளையும் போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். நகை வாங்குவது போல நடித்து நகை பட்டறை உரிமையாளரை தாக்கி 80 சவரன் நகைகளை அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் யானை கவுனி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜெகதீஷ் கடைக்கு அருகே கடை நடத்தி வரும் சுதாகர் கூறுகையில் , “ஜெகதீஷ் ரத்த காயங்களோடு வெளியே வரும் பொழுது தான் இந்த விவகாரமே தங்களுக்கு தெரியும் உடனடியாக நாங்கள் அனைவரும் அவரை பிடிக்க முயற்சி செய்தோம். ஆனால் அவர்கள் ஏற்கனவே தப்பி சென்ற விட்டனர். நாகை பட்டறை நடத்தி வரும் குறிப்பாக மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இந்த இடத்தில் இதுபோன்ற சம்பவம் நடந்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. சிசிடிவி காட்சிகளில் அவர்கள் பதிவாகியுள்ளனர் குறிப்பாக கடைக்கு உள்ளே செல்லும் பொழுது ஒரு ஆடையும் வெளியே செல்லும் பொழுது வேறொரு ஆடையும் அணிந்து கொண்டு இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர் எனவும், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் நிச்சயம் அவருக்கு நன்கு தெரிந்த நபர்களாகத்தான் இருக்க முடியும். அவரை குறித்து நன்கு தெரிந்த நபர்கள் தான் இந்த காரியத்தில் ஈடுபட்டு இருப்பார்கள் என்கிற சந்தேகத்தை எழுப்பினார்.
மேலும் பேசிய அவரை கொலை செய்து விட்டு நகையைத் திருட அவர்கள் திட்டமிட்டு இருக்கலாம். ஆனால் அவர் மயக்கமுற்ற நிலையில், அவர்கள் நகையை மட்டும் கொள்ளையடித்து விட்டு சென்றுள்ளனர். இது குறித்து போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்து அருகில் இருக்கும் கடைக்காரர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
அருகில் உள்ள கடையில் பணிபுரியும் சித்ரா என்கிற பெண்மணி அளித்த பேட்டி, “நீண்ட நாட்களாக ஆர்டர்கள் எதுவும் இல்லாமல் ஜெகதீஷ் இருந்து வந்ததாகவும் தற்போது தான் அவருக்கு வேலை செய்வதற்கான ஆர்டர்கள் கிடைத்த நிலையில் இது போன்று சம்பவம் நடந்திருப்பதாகவும், குறிப்பாக வெளியில் வந்து ரத்த காயத்தோடு இருந்தால் எதற்காக சத்தம் போடவில்லை என கேட்டதற்கு தான் சத்தம் போட்டதாகவும் ஆனால் அந்த கடையில் உள்ளே இருந்து சத்தம் எழுப்பினால் வெளியே கேட்கவில்லை என தெரிவித்ததாகவும், அவர்களை சிசிடிவி காட்சி மூலமாகத்தான் தாங்கள் பார்த்ததாகவும் குறிப்பாக ஜெகதீஷ் யாரையும் அவ்வளவு எளிதில் கடையில் அனுமதிக்க மாட்டார். முதலில் அவர்கள் யார் என்று பார்த்துவிட்டு தான் அனுமதிப்பார். ஆனால் இந்த விவகாரத்தில் அவர் எப்படி அவர்களை கடைக்குள் அனுமதித்தார் என தெரியவில்லை. அவருக்கு ஏற்பட்டது போல வேறு யாருக்கும் ஏற்படக்கூடாது இதற்கு உரிய நடவடிக்கை எடுத்து பாதுகாப்பு அளிக்க வேண்டும் என தெரிவித்தார்.


