கண்டெய்னருக்குள் ரகசிய அறை அமைத்து 717 கிலோ கஞ்சா கடத்திச் சென்ற கும்பலை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு கைது செய்தது.
மதுரை– தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் மேலவிட்டம் அருகே சோதனை நடத்தியபோது, வாகனத்தின் உள் பகுதியிலான போலி மேல் தளம் மற்றும் மறைவிடங்களில் நுணுக்கமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது. 717 கிலோ கஞ்சா ரூ.3.58 கோடி இருந்தது தெரிய வந்தது. ஆந்திரப் பிரதேசம், விசாகப்பட்டினம் மாவட்டம், படேரு பகுதியிலிருந்து தமிழ்நாட்டிற்கு இந்த கஞ்சா கடத்தப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. தூத்துக்குடி பகுதியிலுள்ள ஒருவருக்கு அனுப்ப திட்டமிடப்பட்டிருந்தது. கஞ்சா கடத்திய 4 பேரை போலீசாா் கைது செய்தனர். இவர்கள் உடன்குடி மற்றும் தூத்துக்குடி பகுதிகளை சேர்ந்தவர்கள் எனவும், இவர்களில் சிலர் கொலை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.
இந்த கடத்தல் சம்பவத்தில் மூளையாக செயல்பட்டவரையும், வாகன உரிமையாளரையும் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு தீவிரமாக தேடுகிறது. இவர்களின் நிதி பரிவர்த்தனைகள் மற்றும் தொடர்புடையவர்கள் குறித்தும் விசாரணை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கம் முதல், மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு சென்னை மண்டல அதிகாரிகள் 2427.35 கிலோ கஞ்சா, 87.64 கிலோ ஹஷிஷ் எண்ணெய் மற்றும் 1.045 கிலோ அம்பெட்டமின் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர். மொத்தமாக ரூ.18.75 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், முந்தைய வழக்குகளில் 8 பேருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் போதைப்பொருள் தொடர்பான தகவல்களை உதவி எண்ணான 1933-ல் தெரிவிக்குமாறு மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
