இளம் பெண்ணை காதலித்து, பாலியல் பலாத்காரம் செய்து திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிவிட்டு வேறு ஒரு பெண்ணிற்கு தாலி கட்டும் நேரத்தில் சினிமா பாணியில் மணமகனை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் ராஜேந்திர நகரை சேர்ந்தவர் பிருத்வி, அதே பகுதியை சேர்ந்த இளம் பெண்னுடன் நட்பாக பழகி திருமணம் செய்து கொள்வதாக கூறி காதலித்து பாலியல் பலாத்காரம் செய்தார்.


இந்நிலையில் பிருத்வி பெற்றோர் வேறு ஒரு பெண்ணுடன் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் இவர்களின் திருமணம் ஆசிஸ் நகரில் உள்ள திருமண மண்டபத்தில் கடந்த 24-ம் தேதி நடைபெற இருந்தது. திருமணத்திற்காக பிரம்மாண்டமான அலங்காரத்துடன் உறவினர்கள் அனைவரும் வந்த நிலையில் சில மணி நேரத்தில் திருமணம் நடைபெற இருந்தது.
இதற்கிடையே பிருத்வியால் பாதிக்கப்பட்ட பெண் மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரை அடுத்து போலீசார் சினிமா பாணியில் திருமண மண்டபத்திற்கு சென்று திருமண வீட்டாரிடம் நடந்ததை கூறி திருமணத்தை நிறுத்தி மணமகனை திருமண மண்டபத்திலே வைத்து கைது செய்தனர்.

கல்யாண மேடையில் இருக்கும் போது மணமகன் கைது செய்யப்பட்ட சம்பவம் திருமண வீட்டார் மற்றும் உறவினர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிருத்வி தனது தேவைகாக காதல் என்ற பெயரில் நிறைவேற்றி கொண்டது மட்டுமின்றி ஏராளமான பணத்தையும் தன்னிடம் இருந்து பெற்றதாக பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் பேரில் பிருத்வி மீது போலீசார் மோசடி மற்றும் பாலியல் பலாத்காரம் வழக்கு பதிவு செய்தனர்.
