Homeசெய்திகள்க்ரைம்பிரபல திருடன் தூத்துக்குடி முத்து கைது

பிரபல திருடன் தூத்துக்குடி முத்து கைது

-

- Advertisement -

சென்னை சாலிகிராமத்தில் தொழிலதிபர் வீட்டில் ஒன்றரை கோடி மதிப்புள்ள (நகை, பணம்) கொள்ளையடித்த பிரபல கொள்ளையனை கைது செய்துள்ளனர்.

பிரபல திருடன் தூத்துக்குடி முத்து கைது செய்யப்பட்டார். மேடை அலங்கார தொழிலாளியாக வேலை செய்து கொண்டு கொள்ளையிலும் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சென்னை சாலிகிராமம் குமரன் காலனி 2வது தெருவில் உள்ள வீட்டில் வசித்து வருபவர் சந்தோஷ்குமார்(வயது69) தொழில் அதிபரான இவர் பிரபல கலர் லேப் நிறுவனம் நடத்தி வருகிறார்.

சந்தோஷ்குமார் கடந்த மாதம் 22ந் தேதி வீட்டை பூட்டி விட்டு மனைவி அருணாதேவியுடன் ஹைதராபாத் சென்றார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் அவரது வீட்டிற்குள் புகுந்து பீரோவை உடைத்து ரூபாய் 13.5 லட்சம் ரொக்கப் பணம் மற்றும் தங்கம், வைர நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை அள்ளி சென்றனர். இதன் மதிப்பு சுமார் ஒரு கோடியே 50 லட்சம் என்று கூறப்படுகிறது.

கொள்ளையில் ஈடுபட்டு தப்பிய மர்ம நபர்களை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டு தொடர்ந்து பல்வேறு கோணங்களில் போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர். இந்த நிலையில் ஜெ.ஜெ நகர் கோல்டன் ஜார்ஜ் நகர் பகுதியில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31ம் தேதி பாலாஜி ராம்குமார் என்பவரது வீட்டில் 23 பவுன் நகை கொள்ளை போனது.

இந்த சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு ஆய்வு செய்ததில் கொள்ளையில் ஈடுபட்டது தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த முத்து(வயது32) என்பது தெரிந்தது. அவனை பிடிக்க போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

கடந்த 5 மாதங்களாக போலீசில் சிக்காமல் தலைமறைவாக இருந்து வந்த முத்துவை நொளம்பூர் இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் மில்லர் பொன்ராஜ் தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர். அவனிடம் நகைகள் அதிகளவில் இருந்ததால் சந்தேகமடைந்த போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் விருகம்பாக்கத்தில் தொழில் அதிபர் சந்தோஷ்குமார் வீட்டில் நகை பணத்தை கொள்ளையடித்ததை அவன் ஒப்புக் கொண்டான்.

சென்னை அயப்பாக்கம் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி திருமணம் உள்ளிட்ட விஷேச நிகழ்ச்சிகளுக்கு மேடை அலங்காரம் செய்யும் வேலை பார்த்து வரும் முத்து மீது ஏற்கனவே 4 கொள்ளை வழக்குகள் உள்ளன. தனி ஆளாக வீடு புகுந்து கொள்ளையடிப்பதில் கை தேர்ந்த முத்து நகை பணத்தை கொள்ளையடித்து விட்டு ஈரோடு சேலம் ஆகிய பகுதிகளுக்கு சென்று பதுங்கி கொள்வது விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட முத்துவிடம் சந்தோஷ்குமார் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட நகை பணம் குறித்து விருகம்பாக்கம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த கொள்ளை சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடைப் பெற்று வருகிறது.

சென்னை தவிர இவர் மீது வேற எந்தெந்த மாவட்டங்களில் வழக்குகள் உள்ளன எனவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

MUST READ