அய்யம்பேட்டையில் டூர்ஸ் மற்றும் டிராவல்ஸ் என்ற நிறுவனம் நடத்தி பொதுமக்களிடம் இந்நிறுவனத்தில் முதலீடு செய்தால் ஈவுத்தொகை அதிகம் கிடைக்கும் என்று கூறி பல கோடி ரூபாயை ஏமாற்றிய சம்பவத்தில் மூன்றாண்டுகளுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த பாத்திமா என்பவர் பொருளாதார குற்றத் தடுப்பு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டம் அய்யம்பேட்டையில் பரீனா டூர்ஸ் மற்றும் டிராவல்ஸ் நிறுவனம் ஆகியவற்றை ஹக்கீம் என்பவரும் அவரது மனைவி பாத்திமா என்பவரும் நடத்தி வந்தனர் .

இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிகமாக ஈவுத்தொகை கிடைக்கும் என்று பொதுமக்களிடையே இவர்கள் விளம்பரப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்தால் மாதம் தோரும் 2500 ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவித்ததாகவும் ,இதனை நம்பி நூற்றுக்கணக்கானோர் இவர்களது நிறுவனத்தில் முதலீடு செய்ததாக கூறப்படுகிறது.
2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் கொரோனா காலகட்டத்தில் இந்த நிறுவனம் மூடப்பட்டது. ஹக்கீமும் இவரது மனைவி பாத்திமாவும் தலைமறைவாகினர்.
இந்த நிறுவனத்தில் 10 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்து ஏமாந்ததாக 300 க்கும் மேற்பட்டோர் தஞ்சாவூரில் உள்ள பொருளாதார குற்ற தடுப்புப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் .
இதனை தொடர்ந்து பொருளாதார குற்றத்தடுப்பு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து ஹக்கீமையும் அவரது மனைவி பாத்திமாவையும் தேடி வந்தனர். இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் ஹக்கீம் கைது செய்யப்பட்டார்.
தொடர்ந்து இவரது மனைவி பாத்திமா தலைமறைவாக இருந்த நிலையில் கோவை மாவட்டம் தம்மம்பட்டியில் பதுங்கி இருந்த பாத்திமாவை பொருளாதார குற்றத்தடுப்பு காவல் துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினருக்கு வந்த புகாரின் மதிப்பு 10 கோடி ரூபாய். காவல் நிலையத்தில் புகார் அளிக்காமல் ஏராளமானோர் உள்ள நிலையில் இந்த கைது சம்பவம் இப்பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.
இதே பகுதியில் ஏற்கனவே ராகத், மர்ஜிக் ,போன்ற ஆம்னி பஸ் நிறுவனங்கள் பொது மக்களிடையே பல கோடி ரூபாய் மோசடி செய்த நிலையில், அப்பகுதியில் இந்த நிறுவனமும் அந்த பட்டியலில் இணைந்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.