அடையாறில் எட்டு வயது சிறுவன் நூதன முறையில் பணம் பறித்து சென்றதாக சமூக வலைதளம் பக்கத்தில் நடிகை நிவேதா பெத்துராஜ் குற்றம் சாட்டியுள்ளார்

நடிகை நிவேதா பெத்துராஜ் ஒருநாள் கூத்து என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகத்திற்கு அறிமுகமானவர். அதன் பின்பு தமிழ் தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.
அதேபோன்று தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் பேசப்பட்டு வரும் நடிகை நிவேதா பெத்துராஜ், கடந்த சில மாதங்களுக்கு முன்பு காவல்துறையிடம் வாக்குவாதம் ஈடுபட்டது போன்ற வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வெளியானது. ஆனால் அது பட பிரமோஷனுக்காக நிகழ்ந்ததாக கூறப்பட்டது.
இந்நிலையில் நடிகை நிவேதா பெத்துராஜ் தனது சமூக வலைதள பக்கத்தில் அடையாறு சிக்னல் பகுதியில் காரில் சென்று கொண்டிருக்கும் பொழுது எட்டு வயது சிறுவன் பணம் கேட்டதாகவும் அதற்கு தர மறுத்ததாக தெரிவித்துள்ளார். இதையடுத்து சிறுவன் புத்தகம் ஒன்று 50 ரூபாய்க்கு விற்பனை செய்ய முயன்றதாக கூறினார். அப்பொழுது 100 ரூபாய் பணம் கொடுத்து புத்தகத்தை வாங்க முயன்றதாகவும், அப்போது அந்த சிறுவன் 500 ரூபாய் தாங்க எனக் கேட்டதாகவும் தெரிவித்துள்ளார். உடனடியாக புத்தகத்தை திருப்பி கொடுத்துவிட்டு 100 ரூபாயை வைத்துக் கொண்டதாக நடிகை நிவேதா பெத்துராஜ் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் திடீரென அந்தச் சிறுவன் காருக்குள் புத்தகத்தை போட்டுவிட்டு தன் கையில் இருந்த பணத்தை பறித்து சென்று விட்டதாக கூறியுள்ளார்.
இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்கிறதா எனவும் நீங்களும் இது போன்ற சம்பவங்களை சந்தித்துள்ளீர்களா எனவும் தன்னோட சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது சிறுவர்களை வைத்து நடைபெறும் நூதன வழிப்பறி முயற்சியா அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை நடந்துள்ளதா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மாதவன் நடிப்பில் உருவாகும் ‘அதிர்ஷ்டசாலி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!