தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மின் இணைப்பு கிடைக்காமல் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாகப் பல குடும்பங்கள் இருளில் வாழ்ந்து வரும் அவலநிலையும், அதற்கு லஞ்சம் கேட்கப்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
15 ஆண்டுக்கால இருள் வாழ்க்கை
பெரியகுளம் அருகே உள்ள சருத்துப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட எம்.ஜி.ஆர் நகரில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இதில் அப்பகுதியின் கடைசி எல்லையில் உள்ள 8-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வீடுகள் கட்டி 15 ஆண்டுகள் கடந்தும், இதுவரை மின்சார வசதி இன்றி இருளிலேயே காலத்தைக் கழித்து வருகின்றன.

லஞ்சம் கேட்பதாகக் குற்றச்சாட்டு
மின் இணைப்பு கோரி மின்சார வாரிய அலுவலகத்தை அணுகும்போது, ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் முறைகேடாகப் பணம் கேட்பதாகப் பாதிக்கப்பட்ட மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
மின் கம்பங்கள் ஊன்றுவதற்கு ₹40,000 முதல் ₹50,000 வரை தர வேண்டும்.
பணி செய்ய வரும் ஊழியர்களுக்கு உணவு உள்ளிட்ட வசதிகளைச் செய்து தர வேண்டும். என மின்வாரியத் தரப்பில் கட்டாயப்படுத்துவதாகக் கூறப்படுகிறது. ஏழை எளிய மக்களான தங்களால் இந்தத் தொகையைக் கொடுக்க முடியாத காரணத்தால், வேறு வழியின்றி தொடர்ந்து மின்சாரமின்றி வாழ வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
விஷஜந்துக்கள் அச்சத்தில் பொதுமக்கள்
இரவு நேரங்களில் மின்சார வெளிச்சம் இல்லாததால் பாம்பு, தேள் உள்ளிட்ட விஷஜந்துக்களின் நடமாட்டம் அதிகரித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் அச்சத்துடன் வாழ்ந்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
அரசுக்குக் கோரிக்கை
இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த அழகம்மாள் உள்ளிட்ட பொதுமக்கள் கூறுகையில், “தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் உடனடியாகத் தலையிட்டு, லஞ்சம் கேட்கும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், எங்களது வீடுகளுக்குத் தாமதமின்றி இலவச மின் இணைப்பு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்” என வலியுறுத்தியுள்ளனர்.
