நீலகிரி மாவட்டம் உதகையில் வாகனங்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற காரை மடக்கிப் பிடித்த காவலரை, மதுபோதையில் கன்னத்தில் அறைந்த அரசுப் பள்ளி தலைமையாசிரியர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொடர் விபத்துகள்
சுற்றுலாத் தலமான நீலகிரியில் உள்ளூர் மக்களின் வாகனங்கள் மட்டுமின்றி, சுற்றுலாப் பயணிகளின் வருகையும் அதிகமாக இருப்பதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கம். இதனைச் சீர்செய்ய முக்கியச் சந்திப்புகளில் போதிய காவலர்கள் நியமிக்கப்பட்டுப் போக்குவரத்து ஒழுங்குபடுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், M.பாலடா பகுதியிலிருந்து உதகை நோக்கி வந்த கார் ஒன்று, வழியில் ஒரு வாகனத்தின் மீது உரசிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது. தொடர்ந்து உதகை கேசினோ சந்திப்பு பகுதியிலும் மற்றொரு வாகனத்தின் மீது மோதிவிட்டு, கமர்சியல் சாலை வழியாக உதகை நகருக்குள் வேகமாகச் சென்றுள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாகக் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
மணிக்கூண்டு பகுதியில் மடக்கிப் பிடிப்பு
தகவல் அறிந்ததும் காவல்துறை கட்டுப்பாட்டு அறை மூலம் வாக்கி டாக்கி வழியாக அனைத்துக் ரோந்து காவலர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, மார்க்கெட் மணிக்கூண்டு பகுதியில் ரோந்தில் ஈடுபட்டிருந்த காவலர்கள் அந்த காரை அடையாளம் கண்டு தடுத்து நிறுத்தினர்.
காரிலிருந்து இறங்கிய நபர் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றபோது, சீருடையில் இருந்த காவலர் ஒருவர் அவரை மடக்கிப் பிடித்தார். இதில் ஆத்திரமடைந்த அந்த நபர், எதிர்பாராத விதமாகப் பணியில் இருந்த காவலரின் கன்னத்தில் ஓங்கி அறைந்துள்ளார்.
தலைமையாசிரியர் கைது
இதனால் நிலை குலைந்த காவலர் மற்றும் அங்கு வந்த சக காவலர்கள் இணைந்து அந்த நபரைப் பிடித்து B1 காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர் கடநாடு அரசுப் பள்ளியில் தலைமையாசிரியராகப் பணியாற்றி வரும் சீனிவாசன் (57) என்பதும், மதுபோதையில் வாகனத்தை இயக்கி விபத்துகளை ஏற்படுத்தியதும் தெரியவந்தது. இதையடுத்து, அரசு ஊழியரைப் பணி செய்ய விடாமல் தடுத்தல் மற்றும் தாக்குதல் நடத்தியதன் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.
வைரல் வீடியோவும் சக ஆசிரியர்களின் விளக்கமும்
தலைமையாசிரியர் சீனிவாசன் சீருடையில் இருந்த காவலரைத் தாக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதனிடையே, கைது செய்யப்பட்ட சீனிவாசனுக்கு மதுப் பழக்கமே இல்லை என்றும், அவர் அடிக்கடி மனநிலையால் பாதிக்கப்படும்போது இதுபோன்று நடந்துகொள்வார் என்றும் அவருடன் பணியாற்றும் சக ஆசிரியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
