நான்கு வயது பேத்தியை கழுத்தை நெரித்து கொன்ற பாட்டி, மற்றொரு குழந்தையை கொல்ல முயன்றபோது உறவினர்கள் தடுத்து நிறுத்தினர்.
சேலத்தில் நான்கு வயது பேத்தியின் கழுத்தை நெரித்து கொலை செய்த பாட்டியை, உறவினர்கள் மடக்கி பிடித்ததால் மற்றொரு கைக்குழந்தையின் உயிர் தப்பியது.

சேலம் மாநகரில் உள்ள சூரமங்கலம் போடிநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் விமல்குமார் (30). இவரது மனைவி மேகலா (26). இவர்களுக்கு மதுபிருத்திகா என்ற நான்கு வயது மகள் இருந்தார். இந்நிலையில், இரண்டாவதாக கர்ப்பமடைந்த மேகலா, பிரசவத்திற்காக சேலம் மாநகரில் உள்ள செவ்வாய்பேட்டை, சுப்பிரமணியம் தெருவில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றிருந்தார்.
அங்கு தாய் சாந்தி, தந்தை மாதேஸ்வரன் ஆகியோர் மேகலாவையும், முதல் குழந்தை மதுபிருத்திகாவையும் கவனித்து வந்தனர். இந்தநிலையில் கடந்த 45 நாட்களுக்கு முன், மேகலாவிற்கு ஆண் குழந்தை பிறந்தது. இதனால் மகள் மதுபிருத்திகா மற்றும் பிறந்து 45 நாளே ஆன ஆண் குழந்தை கீர்த்தி-யுடன் தாய் வீட்டிலேயே மேகலா இருந்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று(03.02.2023) மதியம், துணி துவைப்பதற்காக மேகலா வீட்டின் மாடிக்கு சென்றார். அப்போது தாய் சாந்தி மட்டும் பேரக் குழந்தைகளுடன் கீழே இருந்துள்ளார். துணிகளை துவைத்து காய வைத்துவிட்டு, சிறிது நேரத்தில் மாடியிலிருந்து மேகலா கீழே இறங்கி வந்தபோது, அவரது தாய் சாந்தி நாற்காலில் அமர்ந்திருக்க, தனது 4 வயது குழந்தையான மதுபிருத்திகா மயங்கிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த்தைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பதற்றமடைந்த மேகலா, காப்பாற்றுங்கள் என கூச்சலிட்டுள்ளார்.

அப்போது தாய் சாந்தி திடீரென மற்றொரு அறைக்குள் புகுந்து கதவை தாழிட்டு கொண்டார். அங்கு மேகலாவின் ஆண் குழந்தை இருந்தது. அந்த குழந்தையையும் கொல்ல முயற்சிப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த மேகலா, அறையின் கதவை உடைத்து உள்ளே புகுந்து குழந்தையை காப்பாற்றினர். அதற்குள் அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் சாந்தியை மடக்கி பிடித்தனர்.
மேலும், பேச்சு மூச்சின்றி கிடந்த குழந்தை மதுபிருத்திகாவை தூக்கிக்கொண்டு, அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். அப்போது அங்கிருந்த மருத்துவர்கள், சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்ததில், ஏற்கனவே குழந்தை இறந்து விட்டதாகவும், கழுத்து நெரிக்கப்பட்டதற்கான காயங்கள் இருப்பதாகவும், கழுத்தை நெறித்ததால் குழந்தை இறந்து விட்டதாகவும் தெரிவித்தனர்.
இது குறித்து செவ்வாய்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில், மாநகர போலீஸ் துணை கமிஷனர் லாவண்யா, உதவி கமிஷனர் வெங்கடேசன், இன்ஸ்பெக்டர் ஜெகதேவி ஆகியோர் வந்து விசாரணை நடத்தினர்.
முதற்கட்ட விசாரணையில், மேகலாவின் தாய் சாந்தி தான், பேத்தி மதுபிருத்திகாவின், கழுத்தை நெரித்து கொன்றார் என தெரியவந்தது. மேலும் தொடர்ந்து ஆண் குழந்தையை கொல்ல முயன்றபோது உறவினர்கள் மடக்கி பிடித்து, அக்குழந்தையை காப்பாற்றியதும் தெரியவந்தது.

விசாரணையில் சாந்திக்கு கடந்த ஆறு மாதத்திற்கு மேலாக மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது.
இதனை அடுத்து சாந்தியை தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் விசாரணையில் சாந்தி மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால் தான், பேத்தி என்றும் பாராமல் சிறுமியின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
இதுபற்றி தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 4 வயது பெண் குழந்தையை பாட்டியே கழுத்தை நெரித்துக் கொன்ற சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


