திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு-அயத்தூர் இடையே இணைப்புச் சாலை மற்றும் சுரங்கப்பாதை இல்லாத்தால் சுமாா் 1000க்கும் அதிகமான குடும்பங்கள் தவித்து வருகின்றன- உடனடியாக சாலை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில், வேப்பம்பட்டு அருகிலுள்ள அயத்தூர் கிராமத்தில் சுமார்1000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். ஆனால், இங்கு வசிக்கும் மக்களுக்கு பிரதான போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தினால், அவ்வழியாக வேலைக்கு செல்பவர்கள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் மற்றும் மருத்துவ தேவைகளுக்காக செல்வோர் என பலரும் கடும் சிரமத்திற்குள்ளாகின்றனர்.

புதியதாக அமைக்கப்பட்ட சென்னை–திருப்பதி தேசிய நெடுஞ்சாலை காரணமாக, பழைய சாலை இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அயத்தூர், ஶ்ரீ சீனிவாசா நகரில் வசிக்கும் தேவி என்பவர் கூறுகையில், ”பழைய இணைப்புசாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால், சென்னை–திருவள்ளூர் சாலையை அடைய வேறு எந்த வழியும் இல்லாத காரணத்தினால் அயத்தூர் செல்ல (57+395) என்ற இடத்தில் உள்ள சுரங்கப்பாதையை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்து வந்த பாலாஜி நகர் பேருந்து நிலையத்துக்கு செல்லும் சாலை, புதிய தேசிய நெடுஞ்சாலை அமைப்பினால் துண்டிக்கப்பட்டுள்ளது என்று கூறினாா்.
மேலும், சுமார் நான்கு மாதங்களுக்கு முன்பு அந்தப் பகுதியில் வசிக்கும் 20 பேர் பாலாஜி நகர் மற்றும் ஶ்ரீ சீனிவாசா நகர் இடையே சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர். நெற்குன்றத்தில் உள்ள இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய அலுவலகத்தில் தலைவர், செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட 20 பேர் கொண்ட குழு மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிவித்தாா்.

இப்பகுதியில் மின்விளக்கு வசதி இல்லை. சாலையோரங்களில் பாம்புகள் சுற்றித் திரிகின்றன. சிலர் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதும் அதிகரித்துள்ளது. இந்த சாலையை இரவு நேரங்களில் பயன்படுத்தும் மக்கள் அச்சத்துடன் பயணம் செய்கின்றனர். இதனால் வேலை முடித்து வீடு திரும்பும் பெண்கள் மற்றும் முதியவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளதாக தேவி கூறியுள்ளாா்.
இப்பகுதியில் பேருந்து வசதி இல்லாததால், வேப்பம்பட்டு ரயில் நிலையத்திலிருந்து பாலாஜி நகர் செல்ல தினமும் ரூ.150 வரை ஆட்டோ கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள பொதுமக்கள் மற்றும் தினக்கூலி வேலை செய்பவர்கள் பெரும் சிரமத்தை மேற்கொண்டு வருகின்றனர். 1.5 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள வேப்பம்பட்டு ரயில் நிலையத்தை அடைய, மக்கள் 3 கிலோமீட்டர் சுற்றிச் செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, 57+395 என்ற சுரங்கப்பாதை அமைந்துள்ள இடத்திலிருந்து, பழைய பயன்பாட்டில் இருந்த 57+150 என்ற இடம் வரை சுமார் 200 மீட்டர் தூரத்திற்கு இணைப்புச் சாலை அமைக்க வேண்டும் என அப்பகுதிமக்கள் அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
வண்ணார்பேட்டை மேம்பாலத்தில் விபத்து ஏற்படும் அபாயம்…. வாகன ஓட்டிகள் கடும் அவதி


