கரூர் மாவட்டம் தரகம்பட்டி பகுதியில் இயங்கி வரும் தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பேருந்து மீது லாரி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், 15-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வரும் இந்தப் பள்ளியில், வழக்கம்போல் இன்று காலை கடவூர், பாலவிடுதி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து மாணவர்களை ஏற்றிக்கொண்டு பள்ளி பேருந்து பள்ளிக்கு வந்துகொண்டிருந்தது.

லாரி – பேருந்து நேருக்கு நேர் மோதல்
பேருந்து பாலவிடுதி அருகே வந்து கொண்டிருந்தபோது, எதிரே விலங்குத் தீவனங்களை ஏற்றி வந்த கனரக லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, பள்ளி பேருந்தின் மீது நேருக்கு நேராகச் சென்று பயங்கரமாக மோதியது. இந்த விபத்தின் கோரத் தாண்டவத்தில் பேருந்தின் முன்பகுதி பலத்த சேதமடைந்ததுடன், உள்ளே இருந்த மாணவர்கள் அலறியடித்தனர். இதில் 15-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்குக் காயம் ஏற்பட்டது. குறிப்பாக, ஜன்னல் ஓரமாக அமர்ந்து பயணித்த 4 மாணவிகளுக்குப் பலத்த அடிபட்டுப் கால் முறிவு (Fracture) ஏற்பட்டது.
காவல் துறை அதிரடி மீட்பு நடவடிக்கை
விபத்து குறித்துத் தகவலறிந்த பாலவிடுதி காவல் துறையினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். படுகாயமடைந்த மாணவர்களை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலமாகத் திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து பாலவிடுதி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்து குறித்த தகவல் பரவியதும் மாணவர்களின் பெற்றோர் மருத்துவமனையில் குவிந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
