கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அரசாணை 204-ஐ ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கம் சார்பில் செவிலியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிரசவங்களும், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் புறநோயாளிகளாகவும், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாகவும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு மொத்தம் 304 செவிலியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், இப்பகுதியில் பணியாற்றி வரும் 30 செவிலியர்களைப் பணி நிரவல் (Redeployment) மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதனால், கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் செவிலியர் பற்றாக்குறை ஏற்பட்டு, சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் கடுமையாகப் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
வலியுறுத்தப்படும் மூன்று அம்ச கோரிக்கைகள்:
- அரசாணை 204 ரத்து: ஆட்குறைப்பு மற்றும் பணி நிரவல் நடவடிக்கைக்கு வழிவகுக்கும் அரசாணை 204-ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
- பணி நிரந்தரம்: தொகுப்பூதிய முறையை முழுமையாக ரத்து செய்து, தற்போது தொகுப்பூதியத்தில் பணிபுரியும் செவிலியர்களை உடனடியாகப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
- பணி வரன்முறை: செவிலியர் அலுவலர் எனப் பெயர் மாற்றம் செய்து, அதற்கான பணி வரன்முறை அரசாணையை உடனடியாக வழங்க வேண்டும்.
- இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் சக்திவேல் தலைமையில் செவிலியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். “தற்போது மருத்துவப் பணி பாதிக்காத வகையில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்.
அரசு எங்கள் கோரிக்கைகளுக்குச் செவிசாய்க்காத பட்சத்தில், எதிர்காலத்தில் பணி பாதிக்கும் வகையிலான தீவிர போராட்டங்களில் ஈடுபடுவோம்.” என்று தமிழ்நாடு நர்சுகள் சங்கத்தின் மாநில தலைவர் சக்திவேல் தெரிவித்துள்ளார். அரசின் அரசாணை 204 மூலம் கள்ளக்குறிச்சியில் இருந்து 30 செவிலியர்கள் செங்கல்பட்டுக்கு பணி நிரவல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
