அரியலூர் ஆலமரத்தில் தீ; தனியாக தீயை அணைத்த இளைஞன் – குவியும் பாராட்டுகள்.
அரியலூரில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலமரத்தில் பற்றி எரிந்த தீயை இளைஞர் ஒருவர் போராடி அணைத்த சம்பவம் அப்பகுதி மக்களின் பாராட்டை பெற்றுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள தோப்பேரி என்ற பகுதியில் 100 ஆண்டுகள் பழமையான ஆலமரம் ஒன்று அப்பகுதி மக்களுக்கு பெரும் உறுதுணையாக இருக்கிறது.
இந்நிலையில் அந்த மரத்தில் திடீரென்று தீப்பற்றி எரிந்தது. மளமளவென பரவிய தீ மரத்தின் ஒரு பகுதியில் கொழுந்துவிட்டு எரிந்தது. இதை கவனித்த கண்ணன் என்ற இளைஞர் தீயை அணைக்க முயற்சி மேற்கொண்டார். மேலும் அரசு பள்ளியில் 8ம் வகுப்பு மாணவனான தமிழ்செல்வனும் இதற்கு முன்னர் தீயை அணைக்க போராடியுள்ளான்.
இருவரும் இணைந்து அக்கம்பக்கத்து வீட்டில் இருந்து தண்ணீர் குடங்களை எடுத்துச் சென்று மரத்தின் வேர் பகுதியில் ஊற்றி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இவர்களின் கடும் முயற்சியால் தீ அணைக்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் இருவரையும் வெகுவாக பாராட்டினர்.