பீகார் மாநிலத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்திற்குள்ளானது. நல்வாய்ப்பாக உயிர்ச்சேதம் ஏற்படவில்லை.
பீகார் மாநிலம் ஜாமுய் மாவட்டம் சிமுல்தலா அருகே டெல்வா பஜார் பகுதியில் சிமெண்ட் பாரம் ஏற்றிய சரக்கு ரயில் ஒன்று நேற்று இரவு சென்று கொண்டிருந்தது. இரவு 11.30 மணி அளவில் பதுவா ஆற்று பாலத்தின் மீது சென்றபோது எதிர்பாராத விதமாக ரயில் பெட்டிகள் தடம் புரண்டு விபத்திற்குள்ளானது. இதில் மொத்தமுள்ள 42 பெட்டிகளில் 19 பெட்டிகள் தடம்புரண்டன. 10 பெட்டிகள் ஆற்றுக்குள் விழுந்தன. நல்வாய்ப்பாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.ரயில் தடம் புரண்ட விபத்து காரணமாக ஜசிதிஹ் – ஜாஜா பிரிவு பகுதியில் ரயில் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது.


இதனை அடுத்து தடம் புரண்ட ரயில் பெட்டிகளை அகற்றி போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ரயில்வே துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். ரயில் விபத்து தொடர்பாக உரிய விசாரணை நடத்த இந்திய ரயில்வே உத்தரவு பிறப்பித்துள்ளது. முதற்கட்ட விசாரணையில் தண்டவாளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு அல்லது அதிக சுமை காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. விசாரணை அறிக்கை வந்த பின்னரே விபத்திற்கான காரணம் தெரியவரும்.


