கொல்கத்தாவில் இருந்து 229 பயணிகளுடன் சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் திடீரென எண்ணெய் கசிவு மற்றும் எஞ்சின் கோளாறு ஏற்பட்டதால், சென்னை விமான நிலையத்தில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டு விமானம் பத்திரமாகத் தரை இறக்கப்பட்டது. இதனால் நள்ளிரவில் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.
கொல்கத்தாவில் இருந்து 222 பயணிகள் மற்றும் 7 பணியாளர்கள் உட்பட மொத்தம் 229 பேருடன் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று இரவு சென்னை நோக்கிய பயணத்தைத் தொடங்கியது. இரவு சுமார் 11.30 மணியளவில் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் தரை இறங்குவதற்காக விமானம் நெருங்கியபோது, அதன் இடது பக்க எஞ்சினில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. அதோடு எஞ்சினிலிருந்து எண்ணெய் கசியத் தொடங்கியதையும் விமானி கவனித்தார்.

ஓடுபாதையில் அவசர நிலை அறிவிப்பு
சாதாரணமாகத் தரை இறக்குவது பெரும் ஆபத்தை விளைவிக்கும் என்பதை உணர்ந்த விமானி, உடனடியாக சென்னை விமான நிலையக் கட்டுப்பாட்டு அறைக்கு (ATC) அவசரத் தகவல் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் உடனடியாகச் செயல்பட்டு ஓடுபாதை பகுதியில் அவசர நிலையை (Emergency) அறிவித்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தீயணைப்பு வாகனங்கள், மருத்துவக் குழுவினர் மற்றும் அதிரடிப் படையினர் தயார் நிலையில் நிறுத்தப்பட்டனர். அனைத்துப் பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்படும் வரை, விமானம் வானிலேயே தொடர்ந்து வட்டமடித்துக் கொண்டிருந்தது.
229 பயணிகள் நல்வாய்ப்பாகப் தப்பினர்
பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலைக்கு வந்ததையடுத்து, விமானம் தரை இறங்க அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி, இரவு 11.37 மணியளவில் இண்டிகோ விமானம் சென்னை விமான நிலையத்தில் மிகச் சாதுரியமாகப் பத்திரமாகத் தரை இறக்கப்பட்டது.விமானத்தில் இருந்த 229 பேரும் எவ்விதக் காயமுமின்றி நல்வாய்ப்பாகப் உயிர் தப்பினர். பயணிகள் அனைவரும் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டதைத் தொடர்ந்து நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.
பறக்கத் தகுதியற்றதாக அறிவிப்பு
பயணிகள் அனைவரும் கீழே இறங்கிய பிறகு, விமானப் பொறியாளர்கள் குழுவினர் விமானத்தின் எஞ்சினை ஆய்வு செய்தனர். சோதனையின் முடிவில், அந்த விமானம் முழுமையாகச் சீரமைக்கப்படும் வரை மீண்டும் உடனடியாகப் பறப்பதற்குத் தகுதியற்றது என்று கண்டறியப்பட்டது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
“நள்ளிரவு 12 மணியளவில் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் இயங்க முடியாத நிலையில் (Grounded) இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு, அது ‘ரிமோட் பே’ (Remote Bay) எனப்படும் ஒதுக்குப்புறமான பகுதிக்குக் கொண்டு சென்று நிறுத்தப்பட்டது.”
டெல்லி டி.ஜி.சி.ஏ. தீவிர விசாரணை
நள்ளிரவில் நிகழ்ந்த இந்தச் சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இதனிடையே, விமானத்தில் எஞ்சின் கோளாறு மற்றும் எண்ணெய் கசிவு ஏற்பட்டது குறித்து விரிவான விசாரணை நடத்த டெல்லியில் உள்ள சிவில் விமானப் போக்குவரத்து இயக்ககம் (DGCA – Director General of Civil Aviation) உத்தரவிட்டுள்ளது.
