கர்நாடக மாநிலத்தில் அருவியில் தவறி விழுந்த இளம்பெண் 12 மணி நேரத்திற்கு பின்னர் உயிருடன் மீட்கப்பட்டுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம் துமகூர் மாவட்டம் சிவராமபுரா கிராமத்தைச் சேர்ந்தவர் 19 வயதான இளம்பெண் ஹம்சா. இவர் நேற்று தனது நண்பர்களுடன் மந்திரகிரி மலையை பார்க்க சுற்றுலா வந்துள்ளார். அப்போது அங்கிருந்த நீருற்றுக்கு அருகே நின்று ஹம்சா செல்ஃபி எடுக்க முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக கால் இடறி நீரூற்றில் விழுந்தார். இதில் பாறைகளுக்கு இடையே அவர் சிக்கிக்கொண்டார். இது குறித்து உடனடியாக தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே, அங்கிருந்தவர்கள் ஹம்சா உயிருடன் இருக்கிறாரா? என்பதை அறிந்துகொள்ள கூச்சலிட்டனர். ஆனால் அவரிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் நேற்று மாலை தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில், இன்று காலை மீண்டும் தேடுதல் வேட்டை தொடர்ந்தது.
முதற்கட்டமாக தீயணைப்பு வீரர்கள் அந்த சிறிய நீரூற்றின் நீரை வேறு பக்கமாக செல்லுமாறு திருப்பிவிட்டனர். தொடர்ந்து கீழே இறங்கி தேடியபோது அங்கு ஹம்சா உயிருடன் இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து சுமார் 1 மணி நேரம் போராடி ஹம்சாவை பாறை இடுக்குகளில் இருந்து மேலே கொண்டு வந்தனர். பாறைகளுக்கு இடையே தவறி விழுந்து உயிரிழந்திருப்பார் என கருதிய நிலையில், அந்தப் பெண் உயிருடன் மீட்கப்பட்டிருப்பது அப்பகுதி மக்கள் மற்றும் அவர்து உறவினர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.