நீட் (NEET) தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் தொடர் முறைகேடுகளைக் கண்டித்து டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டம் நடத்தி வரும் காக்ரோச் ஜனதா கட்சி (CJP) பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, பொதுவான இடமான டெல்லி கான்ஸ்டிடியூஷன் கிளப்பில் (Constitution Club of India) இன்று நண்பகல் 12:30 மணிக்கு மத்திய அமைச்சர்களுடனான முக்கியச் சந்திப்பு நடைபெறுகிறது.


“பொதுவான இடத்தில் பேச்சுவார்த்தை”: CJP வரவேற்பு
மத்திய அரசுத் தரப்பில் அமைச்சர்கள் வீட்டில் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்த நிலையில், அதனை ஏற்க மறுத்த CJP அமைப்பினர், நடுநிலையான பொது இடத்தில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு மத்திய அரசு டெல்லி கான்ஸ்டிடியூஷன் கிளப்பில் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளதாக CJP முதன்மைச் செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ் தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பில் மாணவர்களின் முதன்மை கோரிக்கையான மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமா, பாதிக்கப்பட்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெறுவது ஆகியவை குறித்துப் பேசப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
“அமைச்சர் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்” – அபிஜீத் தீப்கே
தேர்வு முறைகேடுகளைத் தடுக்க நாடாளுமன்றத்தில் புதிய கடுமையான சட்ட மசோதா கொண்டுவரப்படும் எனப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்தார். இது குறித்துக் கருத்து தெரிவித்த CJP நிறுவனர் அபிஜீத் தீப்கே, தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக மத்திய அரசு எடுக்கக்கூடிய மிகக் கடுமையான மற்றும் முதன்மையான நடவடிக்கை என்பது தோல்வியடைந்த கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானைப் பதவியிலிருந்து நீக்குவதுதான் என்றார்.
மேலும், அவர் பதவி விலகும் வரை டெல்லி ஜந்தர் மந்தரில் எங்களின் அமைதிப் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்றும், நாடு முழுவதிலும் உள்ள இளைஞர்கள் இன்று எங்களோடு இணைந்துள்ளதால், இந்த நகர்வில் இருந்து நாங்கள் பின்வாங்க மாட்டோம் என்றும் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
26 நாள் உண்ணாநோன்பை முடித்துக்கொண்டார் சோனம் வாங்சுக்
இதனிடையே, நீட் விவகாரம் மற்றும் கல்விச் சீர்திருத்தங்கள் குறித்து எழுத்துப்பூர்வமான உறுதிமொழியை மத்திய அரசு வழங்கியதைத் தொடர்ந்து, சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக் தனது 26 நாட்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்தார். குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரை, மத்திய அமைச்சர்கள் ஜே.பி. நட்டா மற்றும் ஜிதேந்திர சிங் ஆகியோர் வியாழக்கிழமை நள்ளிரவில் நேரில் சந்தித்து அரசின் முடிவுகளைத் தெரிவித்தனர்.
சோனம் வாங்சுக்கின் இந்தத் தியாகம் நாட்டின் மனசாட்சியை உலுக்கியுள்ளதாக CJP அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
டெல்லியில் தொடரும் மாணவர்களின் இந்த அமைதிப் போராட்டமும், மத்திய அரசுடனான இன்றைய கான்ஸ்டிடியூஷன் கிளப் பேச்சுவார்த்தையும் தேசிய அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘ஜனநாயகன்’ திரையிடலில் தேர்தல் தோல்வி வீடியோ: விருதுநகரில் திரையரங்கை முற்றுகையிட்ட தேமுதிகவினர்!
