இந்தியாவில் பெண் குழந்தைகளின் கல்வி இடையில் நிறுத்தப்படுவது படிப்படியாக குறைந்து வருவதாக மத்திய கல்வி அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
மக்களவையில் உறுப்பினர் ஒருவர் இந்தியாவில் மாணவர்கள் மற்றும் மாணவிகள் கல்வி இடையில் நிறுத்தம் தொடர்பாக எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள ஒன்றிய கல்வித்துறை இணை அமைச்சர் அன்னபூர்ணா தேவி,
“அனைவருக்கும் கல்வி” என்ற திட்டத்தின் கீழ் பள்ளி குழந்தைகளின் கல்வி இடைநிற்றலை தடுக்க மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும், குறிப்பாக பெண் குழந்தைகளின் கல்வி இடைநிற்றலை தவிர்க்க 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவிகள் அனைவருக்கும் பள்ளி சீருடை, நோட் புத்தகங்கள் உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்பட்டு வருவதாகவும், பள்ளிகளில் கூடுதலாக பெண் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டு வருவதாகவும் மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

2019-2020ம் கல்வி ஆண்டில், தொடக்க கல்வியில் மாணவர்களின் கற்றல் இடைநிற்றல் விகிதம் 1.9 % ஆகவும், மாணவிகளின் கற்றல் இடைநிற்றல் விகிதம் 1.9 % ஆக இருந்துள்ளது. இதேபோல் மேல்நிலையில், மாணவர்களின் கற்றல் இடைநிற்றல் விகிதம் 17.0 % ஆகவும், பெண்களின் கற்றல் இடைநிற்றல் விகிதம் 15.1 % ஆகவும் இருந்ததாகவும், ஆனால் 2021-2022ம் கல்வி ஆண்டில் இவை குறைந்துள்ளதாக மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, 2020-2021ம் கல்வி ஆண்டில், தொடக்க கல்வியில் மாணவர்களின் கற்றல் இடைநிற்றல் விகிதம் 2.0 % ஆகவும், மாணவிகளின் கற்றல் இடைநிற்றல் விகிதம் 2.0 % ஆக அதிகரித்துள்ளது. ஆனால் மேல்நிலையில், மாணவர்களின் கற்றல் இடைநிற்றல் விகிதம் 13.0 % ஆகவும், பெண்களின் கற்றல் இடைநிற்றல் விகிதம் 12.2 % ஆகவும் குறைந்துள்ளதாக மத்திய அரசின் எழுத்துப்பூர்வ பதிலில் தெரிவித்துள்ளது.