இந்தியா கூட்டணி கட்சிகளின் அடுத்த ஆலோசனை கூட்டம் டிசம்பர் 6ம் தேதி டெல்லியில் நடைபெறும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அறிவித்துள்ளார்.
2024 மக்களவை தேர்தலில் ஆளும் பாஜவை வீழ்த்த நாடு முழுவதும் உள்ள பிரதான எதிர்கட்சிகளான காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட 28 கட்சிகள் இணைந்து மெகா கூட்டணி அமைத்துள்ளன. இந்த கூட்டணிக்கு ‘இந்தியா’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் ஏற்கனவே 2 கட்டங்களாக பீஹார் மற்றும் கர்நாடக மாநிலங்களில் நடந்து முடிந்துள்ள நிலையில் , அடுத்தகட்ட ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் மற்றும் அதன் முடிவுகளுக்காக ‘இந்தியா’ கூட்டணியின் அடுத்த ஆலோசனைக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டு வந்தது. தற்போது 5 மாநிலங்களில் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஷ்கர் மற்றும் தெலுங்கானா ஆகிய 4 மாநிலங்களில் இன்று வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.
இதில் சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்தியப்பிரேதம் ஆகிய 3 மாநிலங்களில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. தெலங்கானாவில் மட்டும் காங்கிரஸ் கட்சி தொடந்து முன்னிலை வகித்து வருகிறது. இந்த நிலையில் இன்று 4 மாநில முடிவுகள் வெளியாகிவிடும் என்பதால் தற்போது இந்தியா கூட்டணியின் அடுத்த ஆலோசனைக் கூட்டம் வருகிற டிச.6ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே , அனைத்து கூட்டணிக் கட்சி தலைவர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார். அந்தவகையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் ‘இந்தியா’ கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த அழைப்பை ஏற்று முதல்வர் ஸ்டாலின் வருகிற 6ம் தேதி டெல்லி செல்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.