
வன்முறை பாதித்த மணிப்பூர் மாநிலத்தில் நேற்று (ஜூலை 07) நள்ளிரவு திடீரென நில அதிர்வு ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். நள்ளிரவு 12.14 மணிக்கு இந்த நில அதிர்வு ஏற்பட்டது. மணிப்பூர் மாநிலத்தின் உக்ரூல் என்ற இடத்தில் இருந்து 13 கி.மீ. தொலைவில் இந்த நில அதிர்வு பதிவானது.

ரிக்டர் அளவில் 3.3 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்களில் அதிர்வு உணரப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே வன்முறையில் உடமைகளை இழந்து பொதுமக்கள் தவித்து வரும் நிலையில் தற்போது ஏற்பட்ட இந்த நில அதிர்வு மணிப்பூர் மக்களை மிகுந்த அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
சுமார் 2 மாதங்களுக்கு மேலாக மணிப்பூர் மாநிலத்தில் கலவரம் நீடிக்கும் நிலையில், வீடுகள், அலுவலகங்கள், சூறையாடப்பட்டன. ஆங்காங்கே வாகனங்களுக்கு தீ வைக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றனர். கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் அரசு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அரசு சார்பில், உணவு மற்றும் உடைகள் வழங்கப்பட்டுள்ளது.
இவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்காது!
ஒரு லட்சத்திற்கும் மேலான பாதுகாப்புப் படையினர் மணிப்பூர் மாநிலத்தில் குவிக்கப்பட்டப் போதிலும், அமைதி திரும்பவில்லை. மத்திய மற்றும் மாநில அரசுகள் மணிப்பூர் மாநிலத்தை இயல்பு நிலைக்குக் கொண்டு வர தீவிர நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், இந்த நில அதிர்வு அந்த மாநில மக்களை மேலும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.