இந்தியாவில் ப்ரீபெய்ட் மொபைல் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் 28 நாட்கள் ரீசார்ஜ் காலாவதி முறையை ரத்து செய்து, முழுமையாக 30 நாட்கள் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் கோரிக்கை எழுந்துள்ளது.
ஆண்டுக்கு 13 முறை ரீசார்ஜ் – இது பகல் கொள்ளை!
மாநிலங்களவையில் இது குறித்துப் பேசிய ஆம் ஆத்மி கட்சி எம்.பி. ராகவ் சதா, தொலைத்தொடர்பு நிறுவனங்களின் தற்போதைய செயல்பாடுகளைக் கடுமையாகச் சாடினார்.

இது குறித்து அவர் பேசுகையில்,
”நிறுவனங்கள் ஒரு மாத ரீசார்ஜ் என்று கூறி 28 நாட்களை மட்டுமே வழங்குகின்றன. இதனால் ஒரு பயனர் ஆண்டுக்கு 12 முறைக்கு பதிலாக 13 முறை ரீசார்ஜ் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார். இது சாதாரண மக்களை ஏமாற்றும் செயல். இந்த ’28 நாட்கள்’ முறையை ரத்து செய்துவிட்டு, காலண்டர் மாதத்தின் படி 30 நாட்கள் வேலிடிட்டியை அனைத்து நிறுவனங்களும் கட்டாயமாக வழங்க வேண்டும்.”
டிராய் (TRAI) மற்றும் மத்திய அரசின் அதிரடி:
ராகவ் சதாவின் இந்தக் கோரிக்கையைத் தொடர்ந்து, மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா இதற்குப் பதிலளித்தார். இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) ஏற்கனவே அனைத்து நிறுவனங்களும் குறைந்தது ஒரு ’30 நாட்கள்’ திட்டத்தையாவது வைத்திருக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.
இருப்பினும், மக்கள் மத்தியில் இது குறித்த விழிப்புணர்வு குறைவாக இருப்பதாகவும், நிறுவனங்கள் 28 நாட்கள் திட்டத்தையே அதிகம் விளம்பரப்படுத்துவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. எனவே, இனி வரும் காலங்களில் 30 நாட்கள் திட்டங்களை நிறுவனங்கள் முன்னிலைப்படுத்த வேண்டும் என அரசு வலியுறுத்தியுள்ளது.
முக்கிய கோரிக்கைகள்:
30 நாட்கள் வேலிடிட்டி:
அனைத்து ‘மாதாந்திர’ திட்டங்களும் முழுமையாக 30 நாட்கள் இருக்க வேண்டும்.
இன்கமிங் வசதி: ரீசார்ஜ் முடிந்த பிறகும், வங்கி OTP மற்றும் அவசர அழைப்புகளுக்காக ‘இன்கமிங்’ வசதியை நீண்ட காலம் வழங்க வேண்டும்.
பயன்படுத்தாத டேட்டா: தினசரி டேட்டா லிமிட்டில் மிச்சமாகும் டேட்டாவை அடுத்த நாளுக்குக் கொண்டு செல்ல (Data Rollover) வழிவகை செய்ய வேண்டும்.
இந்த மாற்றங்கள் நடைமுறைக்கு வரும் பட்சத்தில், கோடிக்கணக்கான இந்திய மொபைல் பயனர்கள் ஆண்டுக்கு ஒரு ரீசார்ஜ் கட்டணத்தைச் சேமிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
தொழிற்துறையினருக்கு நிம்மதி: வணிக சிலிண்டர் விநியோகம் 70% ஆக உயர்வு – ஒன்றிய அரசு அதிரடி!
