Homeசெய்திகள்இந்தியாஒடிசா ரயில் விபத்து- சதி வேலைக்கு வாய்ப்பில்லை

ஒடிசா ரயில் விபத்து- சதி வேலைக்கு வாய்ப்பில்லை

-

ஒடிசா ரயில் விபத்து- சதி வேலைக்கு வாய்ப்பில்லை

ஒடிசா ரயில் விபத்துக்கு சதிச்செயல் காரணமாக இருக்கமுடியாது என ரயில்வே அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

தடம் புரண்ட ரயில் பெட்டிகள் எவை எவை?
Photo: ANI

ஒடிசா மாநிலத்தில் பாலசோர் அருகே கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில், சரக்கு ரயில் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்ட விபத்தில் 280- க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். சுமார் 700- க்கும் மேற்பட்டோர் கட்டக், பாலசோர், புவனேஸ்வர் எய்ம்ஸ் உள்ளிட்ட மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மத்திய அமைச்சர்கள் அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் தர்மேந்திர பிரதான் ஆகியோரின் மேற்பார்வையில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பிரதமர் நரேந்திர மோடி, மீட்புப் பணிகள் மற்றும் சீரமைப்புப் பணிகளைப் பார்வையிட்டு, அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில் ஒடிசா ரயில் விபத்துக்கு சதிச்செயல் காரணமாக இருக்கமுடியாது என ரயில்வே அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். சிக்னல் கட்டுப்பாட்டு அறைக்குள் யாரும் எளிதில் செல்ல முடியாது என்றும், சிக்னல் கட்டுப்பாட்டு அறைக்குச் செல்ல இரண்டு பேரிடம் மட்டும் இரு தொகுதி சாவிகள் இருக்கும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒடிசா ரயில் விபத்து குறித்து முதற்கட்ட அறிக்கை அளித்த குழுவில் இடம்பெற்ற ரயில்வே உயரதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

கோரமண்டல், ஹவுரா ரயில்கள் மோதி கோர விபத்து!
Photo: ANI

ரயில் நிலைய மேலாளர், சிக்னல் பராமரிப்பாளர் இருவரிடமும் உள்ள சாவிகளை ஒரே நேரத்தில் பயன்படுத்தியே திறக்கமுடியும் எனவும் மிகவும் பாதுகாப்பான சிக்னல் கட்டுப்பாட்டு அறைக்குள் வெளியாட்கள் யாரும் நுழைய முடியாது என்றும் விளக்கம் அளித்துள்ளனர். பலத்த பாதுகாப்புடன் உள்ள சிக்னல் கட்டுப்பாட்டு அறைக்குள் நுழைந்து எந்த சீர்குலைவையும் செய்யமுடியாது என தெரிவித்துள்ள ரயில்வே அதிகாரிகள், ரயில்வே சிக்னல்கள் பற்றிய அறிவு இல்லாத யாராலும் சதி வேலையில் ஈடுபட முடியாது என்றும், ரயில் சிக்னல் வயர்களில் நாசவேலை செய்தால் சிக்னல் விளக்கு சிவப்பாகிவிடும் என்றும் விளக்கம் அளித்துள்ளனர்.

MUST READ