Homeசெய்திகள்இந்தியாபிரதமரின் தாயார் ஹீராபென் மோடி இறப்பு - தலைவர்கள் இரங்கல்

பிரதமரின் தாயார் ஹீராபென் மோடி இறப்பு – தலைவர்கள் இரங்கல்

-

வயது முதிர்வு காரணமாக இன்று அதிகாலை 3.30 மணிக்கு உயிரிழந்தார் பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி.

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் 100 வயதான ஹீராபென் மோடி நேற்றைய முன்தினம் பிற்பகலில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள மேதா என்ற தனியார் மருத்துவமனையில் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில மணி நேரங்களில் வெளியான மருத்துவமனை அறிக்கையில் ஹீராபென் மோடியின் உடல்நிலை சீரடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

பிரதமர் நரேந்திர மோடியும் அவசர பயணமாக டெல்லியில் இருந்து குஜராத் மாநிலம் புறப்பட்டு தாயாரின் உடல்நிலை குறித்து நேரில் கேட்டு அறிந்தார். இந்நிலையில் 2வது அறிக்கை நேற்றைய தினம் மருத்துவமனை தரப்பில் வெளியான நிலையில் தொடர்ந்து ஹீராபென் மோடியின் உடல்நிலை சீரடைந்து வருவதாக குறிப்பிடப்பட்டது.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 3.30 மணிக்கு ஹீராபென்மோடி உயிரிழந்ததாக மருத்துவமனை அதிகாரிகள் பிரதமர் மற்றும் அவருடைய குடும்பத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து இன்று காலை பிரதமர் நரேந்திர மோடி அவரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் வலைதள பக்கத்தில், “ஒரு புகழ்பெற்ற நூற்றாண்டு கடவுளின் காலடியில் சேர்ந்திருக்கிறது. துறவியின் பயணம், தன்னலமற்ற கர்மயோகியின் அடையாளம், மதிப்புகளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கையை தனது தாயாரிடம் உணர்ந்தேன். தாயாரின் நூறாவது பிறந்தநாள் சந்திப்பின்போது புத்திசாலித்தனத்துடன் வேலை செய்ய வேண்டும்; தூய்மையான வாழ்க்கையை வாழ வேண்டும் என ஹீராபென் மோடி தன்னிடம் இறுதியாக கூறிய அறிவுரை” என பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.

ஹீராபென் மோடி மறைவையொட்டி பிரதமர் நரேந்திர மோடியின் பல்வேறு அரசு முறை பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேற்குவங்க மாநிலத்தில் வந்தே பாரத் ரயில் தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்சிங் வாயிலாக பங்கேற்பார் எனவும் பிரதமர் அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமரின் தாயார் மறைவுக்கு வைகோ எம்.பி., இரங்கல் தெரிவித்துள்ளார். இந்திய நாட்டின் தலைமை அமைச்சர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்களின் அன்புத் தாயார் ஹீராபென் அம்மையார் அவர்கள் நூறாண்டுகள் வாழ்ந்து, மறைந்திருக்கிறார். இந்த செய்தியை அறிந்து மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைகிறேன். இந்தத் துயரத்தைத் தாங்கிக்கொள்ளக் கூடிய மனவலிமையையும் உறுதியையும் இயற்கை உங்களுக்கு வழங்கட்டும். எனது ஆழ்ந்த அனுதாபங்கள் என்று வைகோ தெரிவித்துக் கொண்டார்.

அதனை தொடர்ந்து மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜநாத் சிங், குஜராத் மாநில முதலமைச்சர் பூபேந்திரபாய் பட்டேல் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

MUST READ