ஆன்லைன் சூதாட்டம் தடை- மாநில அரசுக்கே அதிகாரம்
ஆன்லைன் சூதாட்டங்களை தங்கள் வரம்பிற்குள் கொண்டுவர தேவையான சட்டங்களை மாநில அரசு இயற்ற அதிகாரம் உள்ளது என்று மக்களவையில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆன்லைன் பந்தயம் மற்றும் சூதாட்டம் தொடர்பாக தமிழகத்தை சேர்ந்த திமுக உறுப்பினர் பார்த்திபன் கேள்வி எழுப்பினார்.
அதற்கு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சர் அனுராக் சிங் தாகூர், பந்தயம் மற்றும் சூதாட்டம் இரண்டும் இந்திய அரசியலமைப்பின் 7வது அட்டவணையின் கீழ் வருகிறது.
ஆன்லைன் சூதாட்டங்களை தடுக்க தேவையான சட்டங்களை இயற்ற மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. மேலும், ஆன்லைன் சூதாட்டங்களை சமாளிக்கவும் அதனை மாநில அரசின் அதிகார வரம்புக்குள் கொண்டுவர தேவையான சட்டங்களை மாநில அரசு இயற்றி உள்ளன எனவும் எழுத்துப்பூர்வ விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆன்லைன் விளையாட்டுகளில் திறன் அடிப்படை விளையாட்டு, சூதாட்ட அடிப்படை விளையாட்டு என்பதை உச்சநீதிமன்றம் வகைப்படுத்தி இருப்பதாகவும் எழுத்துப்பூர்வ விளக்கத்தில் மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாகூர் குறிப்பிட்டுள்ளார்.