பிரதமரின் கண்களில் பயத்தை கண்டேன்- ராகுல்காந்தி
எம்பி பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்ட நிலையில் ராகுல்காந்தி டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது பேசிய ராகுல்காந்தி, “அதானி விவகாரத்தில் இருந்து திசை திருப்பவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜனநாயகத்துக்கான மக்கள் குரலாக தொடர்ந்து எனது குரல் ஒலிக்கும். அதானிக்கும் பிரதமர் மோடிக்கும் என்ன தொடர்பு என்பதே எனது கேள்வி, கேள்வி கேட்பதை ஒருபோதும் நிறுத்தமாட்டேன். தகுதிநீக்கத்தை கண்டு ஒருபோதும் அஞ்சமாட்டேன். அதானி, மோடி குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்புவேன். ஜனநாயகத்தை பற்றி பேசும் பாஜக அரசு நாடாளுமன்றத்தில் என்னை பேச அனுமதிக்கவில்லை.

நான் வெளிநாட்டு சக்திகளை அணுகவுமில்லை. இந்தியாவில் ஜனநாயகம் நிலைக்கவே போராடுகிறேன். என்னை சிறையில் அடைத்தாலும் நான் பயப்பட மாட்டேன். கேள்வி கேட்பதை நான் நிறுத்த மாட்டேன். எந்த அச்சுறுத்தலுக்கும் நான் பயப்படமாட்டேன். எந்த வகையிலும் நான் இந்திய அரசுக்கு எதிராக செயல்படவில்லை. அதானி குழுமத்தில் சில முதலீடுகளில் சீனாவுக்கும் தொடர்புள்ளது. ஒருமுறையல்ல என்னை நிரந்தரமாக தகுதிநீக்கம் செய்தாலும் கேள்வி கேட்பதை நான் நிறுத்தப்போவதில்லை. தகுதி நீக்கத்தின் மூலம் எனது குரலை ஒடுக்கிவிட முடியாது. பாஜக அரசின் இதுபோன்ற மிரட்டல்களுக்கெல்லாம் நான் பயப்படமாட்டேன். நான் முதன்முறையாக அதானி பற்றி கேள்வி எழுப்பியபோதே பிரதமரின் கண்களில் அச்சத்தை கண்டேன்” எனக் கூறினார்.


