துவாரபாலகர் தங்க கவசம் கழட்டப்பட்ட விவகாரத்தில் சிக்கியுள்ள அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக திருவிதாங்கூர் தேவ்சம் போர்டு அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது.
கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ளது சபரிமலை ஐயப்பன் கோயில். இங்கு கேரளா மட்டுமின்றி, தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள், ஆண்டுதோறும் மாலையணிந்து விரதமிருந்து சாமி தரிசனம் செய்வதற்காக வருவர். அந்தவகையில் நடப்பாண்டு மண்டல பூஜை தொடங்க இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், கோயிலில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள தேவசம் போர்டு அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அதன்படியே சபரிமலை சன்னிதானத்தில் சோபான படிகளுக்கு முன்பாக இருபுறங்களில் உள்ள துவார பாலகர்களுக்கு அணிவிக்கப்பட்டிருந்த தங்க முலாம் பூசப்பட்ட செப்பு கவசங்களை பழுதுபார்க்க எண்ணி, அதனைக் கழற்றி நன்கொடையாக வழங்கிய சென்னையை சேர்ந்த நிறுவனத்திற்கே அனுப்பி வைத்துள்ளனர்.
1900 கிலோ செம்பு தகடுகள் கொண்ட அந்தக் கவசத்தில் 30 கிலோ 300 கிராம் தங்கம் பயன்படுத்தி முலாம் பூசப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதேநேரம் முன் அனுமதி பெறாமல் கவசம் கழட்டப்பட்டதாகவும், அதிலிருந்த தங்கம் திருடப்பட்டதாகவும் புகார் எழுந்தது. இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க சிறப்பு புலனாய்வு குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. விசாரணை வளையத்தில் உன்னி கிருஷ்ணன் போத்தி என்னும் அதிகாரி உள்ளிட்ட அன்றைக்கு பணியில் இருந்த தேவசம் போர்டு அதிகாரிகள் உட்பட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், சிறப்பு புலனாய்வு குழுவினர் சென்னையில் அம்பத்தூரில் முகாமிட்டு தங்கம் முலாம் பூசும் பட்டறையில் விசாரணையை மேற்கொண்டு வருகிறார்கள்.

இதனிடையே இந்த விவகாரத்தில் தேவசம் போர்டுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் பாஜகவினர் திருவனந்தபுரத்தில் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் தண்ணீர் பீரங்கியை பயன்படுத்தியும் தடியடி நடத்தியும் போராட்டக்காரர்களை கலைத்தனர். மேலும், அனுமதி பெறாமல் தேவசம் போர்டு அதிகாரிகள் கவசங்களை கழற்றியதற்கு கேரள உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் புகாருக்கு உள்ளான தேவசம்போர்டு அதிகாரிகள் மீது என்ன மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து, திருவதாங்கூர் தேவசம்போர்டு அதிகாரிகளின் இன்று ஆலோசனை மேற்கொண்டனர்.