இந்த ஆண்டில், விதிகளை மீறி வாகன பதிவெண் பிளேட்டுகள் பொருத்திய 1.34 லட்சத்து வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்து 2.21 கோடி அபராதம் விதித்திருப்பதாக சென்னை போக்குவரத்து காவல் துறை தெரிவித்துள்ளது.
பெங்களூரு நகரில் விதிகளை மீறி வாகன பதிவு பிளேட்டுகள் பொருந்தி இருப்பதாக புகைப்படங்களை வெளியிட்டு பெங்களூரு போக்குவரத்து காவல் துறை மேற்கு துணை ஆணையர் குல்தீப் குமார் தனது ட்விட்டர் கணக்கில் பதிவிட்டிருந்தார்.


அதில், பதிலளித்திருந்த சென்னையை சேர்ந்த நபர் ஒருவர் சென்னையில் இதுபோன்று நிறைய வாகனங்கள் செல்வதாகவும் சென்னை காவல்துறை, ஹெல்மட் தொடர்பாக வழக்குகளை பதிவு செய்வதில் மட்டுமே கவனம் செலுத்துவதாகவும், இது போன்ற விதிமீறல்களுக்கு சென்னை போலீஸ் நடவடிக்கை எடுப்பதில்லை என பெங்களூரு போலீசாரிடம் குறை கூறி பதிவிட்டிருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சென்னை போக்குவரத்துக் காவல் துறையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கிலிருந்து பதிலளித்துள்ள சென்னை போலீசார், சென்னையில் இந்த ஆண்டு விதிமீறல் வாகனப்பதிவு பிளேட்டுகள் பொருத்தியது தொடர்பாக 1 லட்சத்து 34 ஆயிரத்து 525 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அந்த வாகன ஓட்டிகளுக்கு 2 கோடியே 21 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது.