டெல்லி: மகளிர் இடஓதுக்கீடு மசோதா நம் நாட்டிற்கு ஒருபுதிய திசையை காட்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறி இருக்கிறார்.
131-ஆவது சட்ட திருத்தம் தொகுதி மறுவரையறை மற்றும் இடஒதுக்கீடு மசோதாக்களை ஆதரித்து நாடாளுமன்ற மக்களவையில் பேசிய பிரதமர் மோடி, ”அதிமுக்கியத்துவம் வாய்ந்த மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்பதை தாம் பாக்கியமாக கருதுவதாக கூறினார். இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 3 மசோதாக்களும் இந்தியாவின் எதிா்க்காலத்தை தீா்மானிக்கக் கூடியது. நாட்டிற்கு புதிய திசையை காட்டும். நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பில் இது ஒரு மைல் கல். 3 மசோதாக்களும் எனது அரசு, நாட்டின் வளர்ச்சியில் எவ்வளவு உறுதியாக இருக்கிறது என்பதை பறைசாற்றும். மகளிா் இட ஒதுக்கீட்டை எதிா்த்த அரசியல் கட்சிகளை, பெண்கள் தண்டித்துள்ளாா்கள்.
இன்று நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் வரலாறு நம்மை நினைவு கொள்ளும். மசோதாக்களை எதிர்ப்பவர்கள் நாளை இதற்கான எதிர்வினையை சந்திப்பார்கள். புதிய வரலாறு படைக்க நாடாளுமன்றத்திற்கு பொன்னான நாள். நம் நாட்டின் மக்கள் தொகையில் சரி பாதி உள்ளவர்களுக்கு உரிய பிரதிநித்துவம் வழங்கும் தருணம் இது. எனவே மசோதாக்களை அரசியல் பிரச்சனையாக பார்க்க வேண்டாம், அரசியல் சாயம் பூச வேண்டாம் என்று எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது ஒரு கட்சிக்கு மட்டுமே பெருமை கிடைக்கும் விவகாரம் அல்ல, நாட்டின் மக்கள் தொகையில் 50% உள்ளவர்கள் தங்களுக்கான உரிமையை பெறுவதற்கான நேரம் வந்துவிட்டது. நாட்டை கட்டமைப்பதில் இனி பெண்களின் பங்கு அதிகம் இருக்கும். மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவை எதிர்ப்போரை காலம் ஒருபோதும் மன்னிக்காது. 30 ஆண்டுகளில் ஏராளமான பெண்கள் தலைவர்களாகி உள்ளனர். மகளிர் இட ஒதுக்கீடு மசோதா என்பது காலத்தின் கட்டாயமாகும். முன் எப்போதும் இல்லாத அளவிற்கு பெண்களுக்கு அரசியல் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. தற்போது அனைத்து துறைகளிலும் பெண்கள் முன்னணியில் உள்ளனர்” என்று பிரதமா் மோடி மக்களவையில் பேசினாா்.
