மத்திய அரசு ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனச் சேவைகள் தொடர்பான புதிய மெகா மாற்றங்களை தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது.
ஓட்டுநர் உரிமம் தொடர்பான விதிகளில் முக்கிய மாற்றங்களை கொண்டு வர மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது 20 ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது குறிப்பிட்ட வயது வரம்பின் அடிப்படையில் புதுப்பிக்கப்படும் ஓட்டுநர் உரிமத்தை, இனி ஓட்டுநரின் 50 வயது வரை செல்லுபடியாக வைத்திருக்க அனுமதிக்கும் புதிய நடைமுறை பரிசீலனையில் உள்ளது.

உதாரணமாக, ஒருவர் 20 வயதில் ஓட்டுநர் உரிமம் பெற்றிருந்தால், தற்போதைய நடைமுறையின்படி அவர் 40 வயதில் அதை புதுப்பிக்க வேண்டும். ஆனால் புதிய விதிமுறை அமலுக்கு வந்தால், அவர் 50 வயது வரை அதே உரிமத்தை பயன்படுத்த முடியும். இதன் மூலம் ஓட்டுநர்கள் அடிக்கடி உரிமத்தை புதுப்பிக்க வேண்டிய சிரமம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிக்கும்போது மருத்துவச் சான்றிதழ் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இதன் மூலம் சாலைப் பாதுகாப்பை மேம்படுத்த முடியும் என அதிகாரிகள் கருதுகின்றனர்.
அதேபோல், ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல், வாகன உரிமை மாற்றம், வணிக வாகன அனுமதிப் பத்திரங்கள் புதுப்பித்தல், முகவரி மாற்றம் மற்றும் நகல் உரிமம் பெறுதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை முழுமையாக ஆன்லைன் முறையில் வழங்கும் திட்டமும் பரிசீலனையில் உள்ளது. இதனால் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு (RTO) நேரில் செல்ல வேண்டிய அவசியம் குறைந்து, சேவைகள் விரைவாகவும் வெளிப்படையாகவும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து கட்டணங்களும் இணையவழி மூலம் வசூலிக்கப்படுவதால் மாநில அரசுகளின் வருவாயில் பாதிப்பு ஏற்படாது என்றும், டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரிப்பதன் மூலம் நிர்வாக செயல்திறன் மேம்படும் என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர். மேலும், ஒருங்கிணைந்த தேசிய தரவுத்தளத்தின் மூலம் வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்களின் விவரங்களை நாடு முழுவதும் எளிதாக சரிபார்க்கும் வசதியும் உருவாக்கப்பட உள்ளது.
இதற்கிடையில், போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் ஓட்டுநர்களுக்கு ‘எதிர்மறை புள்ளிகள்’ (Negative Points) வழங்கும் புதிய முறையையும் மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. சிவப்பு விளக்கை மீறுதல், அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், மது அருந்திவிட்டு வாகனம் இயக்குதல், ஹெல்மெட் அல்லது சீட் பெல்ட் அணியாமல் பயணித்தல் போன்ற விதிமீறல்களுக்கு குறிப்பிட்ட அளவு புள்ளிகள் வழங்கப்படும்.
ஒரு ஓட்டுநர் குறிப்பிட்ட அளவை விட அதிக எதிர்மறை புள்ளிகளைப் பெற்றால், அவரது ஓட்டுநர் உரிமம் தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்படவோ அல்லது கடுமையான சூழலில் நிரந்தரமாக ரத்து செய்யப்படவோ வாய்ப்புள்ளது. சாலை விபத்துகளை குறைத்து, பொறுப்பான ஓட்டுநர் பண்பாட்டை உருவாக்கும் நோக்கில் இந்த மாற்றங்கள் வடிவமைக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உட்பிரிவு பட்டா மாறுதல் விண்ணப்பதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
