இந்தியாவில் ஒவ்வொரு குடிமகனுக்கும் அவசியமான அடையாள ஆவணமாக ஆதார் கார்டு விளங்குகிறது. பள்ளிச் சேர்க்கை முதல் அரசு நலத்திட்டங்கள் வரை பல்வேறு சேவைகளில் ஆதார் முக்கிய பங்காற்றுகிறது. இதனால், ஆதார் விவரங்களை காலம்தோறும் புதுப்பித்து வைத்திருப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும்.
குழந்தைகளுக்கும் இந்தியாவில் ஆதார் கார்டு கட்டாயமாக இருக்கிறது . தற்போது குழந்தைகளுக்கான ஆதார் பயோமெட்ரிக் அப்டேட்டை இலவசமாக செய்து கொள்ள ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. குறிப்பாக 5 முதல் 17 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பயோமெட்ரிக் தகவல்களை புதுப்பிப்பதை செப்டம்பர் 30ஆம் தேதி வரை எந்த கட்டணமும் இன்றி செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கு பயோமெட்ரிக் அப்டேட் ஏன் அவசியம்?
5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்படும் ‘பால் ஆதார்’ (நீல நிற ஆதார்) பெற்றோரின் ஆதாருடன் இணைக்கப்பட்டிருக்கும். ஆனால், குழந்தைகள் 5 வயதை எட்டியவுடன் கைரேகை மற்றும் கண் கருவிழி போன்ற பயோமெட்ரிக் விவரங்களை பதிவு செய்ய வேண்டும். இதேபோல், 15 வயதில் மீண்டும் ஒரு முறை அப்டேட் அவசியமாகிறது.
இந்த அப்டேட்டை செய்யாமல் விட்டால், ஆதார் அட்டையின் செயல்பாடு பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இதனால் பள்ளிச் சேர்க்கை, கல்வி உதவித்தொகை, மற்றும் பிற அரசு சேவைகளைப் பெறுவதில் சிக்கல்கள் ஏற்படலாம்.
இலவச அப்டேட் – கடைசி தேதி முக்கியம்
குழந்தைகளுக்கான பயோமெட்ரிக் அப்டேட் செய்வதற்காக கால அவகாசம் வருகின்ற செப்டம்பர் 30 வரை இலவசமாக செய்துகொள்ளளாம் என அறிவித்துள்ளது.
பொதுவான ஆதார் விவரங்கள் (முகவரி, பெயர் போன்றவை) ஜூன் 14 வரை இலவசம் (ஆன்லைன் மூலம்). மேலும், இந்த காலக்கெடுவைத் தாண்டினால், அப்டேட்டுக்கு கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும்.
அப்டேட் செய்வது எப்படி?
குழந்தைகளின் பயோமெட்ரிக் அப்டேட்டை ஆன்லைனில் செய்ய முடியாது. பெற்றோர், குழந்தைகளை அருகிலுள்ள ஆதார் பதிவு மையத்திற்கு அழைத்து செல்ல வேண்டும். அங்கு, குழந்தையின் புகைப்படம், கைரேகை பதிவு, கண் கருவிழி ஸ்கேன் என அனைத்து விவரங்களும் மீண்டும் பதிவு செய்யப்படும். இதற்காக பழைய ஆதார் அட்டையை கொண்டு சென்றால் போதுமானது; கூடுதல் ஆவணங்கள் தேவையில்லை. புதுப்பிக்கப்பட்ட ஆதார் அட்டை சுமார் 15 நாட்களில் உங்கள் முகவரிக்கு அனுப்பப்படும்.
ஏன் இப்போது செய்வது முக்கியம்?
பயோமெட்ரிக் அப்டேட் செய்யாமல் விட்டால், ஆதார் சரிபார்ப்பு தோல்வியடையலாம். இதனால் குழந்தைகள் பெற வேண்டிய அரசு நலன்கள் தடைபட வாய்ப்பு உள்ளது. எனவே, எந்த கட்டணமும் இல்லாத இந்த வாய்ப்பை பயன்படுத்தி, குழந்தைகளின் ஆதார் அப்டேட்டை உடனே செய்து முடிப்பது நல்லது.
ஆகவே, உங்கள் குழந்தைகளின் எதிர்கால சேவைகள் தடையின்றி கிடைக்க, இந்த இலவச அப்டேட் வாய்ப்பை தவற விடாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
டேட்டா இல்லாமல் மலிவு விலை ப்ளான் கட்டாயம் – TRAI புதிய பரிந்துரை…
