மழைக்காலத்தில் சளி பிரச்சனையை தீர்க்கும் இயற்கையான வழிகளை பார்க்கலாம்.
பொதுவாக மழைக்காலத்தில் சளி பிரச்சனை என்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் ஏற்படும். இது உடலில் ஈரப்பதம் அதிகரிப்பது, நோய் எதிர்ப்பு சக்தி குறைவது, பாக்டீரியா, வைரஸ் போன்ற காரணங்களால் உண்டாகக்கூடும். எனவே இதனை இயற்கை வழிமுறைகளின் மூலம் குணப்படுத்தலாம்.

மழைக்காலத்தில் சளி தொந்தரவு இருந்தால் ஒரு பாத்திரத்தில் சூடான நீரை ஊற்றி அதில் சிறிதளவு சுக்கு அல்லது கற்பூரவள்ளி இலைகளை சேர்த்து ஆவி பிடிக்கலாம். தினமும் காலை மற்றும் இரவு என இரு வேளைகளிலும் இவ்வாறு செய்தால் சளியால் ஏற்பட்ட மூக்கடைப்பு குணமாகும்.
அடுத்தது அரை டீஸ்பூன் அளவு சுக்கு, அரை டீஸ்பூன் மிளகு, அரை டீஸ்பூன் திப்பிலி, ஒரு டீஸ்பூன் தேன் ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். இப்போது சுக்கு, மிளகு, திப்பிலி ஆகியவற்றை பொடியாக அரைத்து ஒரு கப் தண்ணீரில் கொதிக்க வைக்க வேண்டும். இந்த தண்ணீர் பாதியாக குறைந்த பின்னர் அதனை வடிகட்டி ஒரு தேக்கரண்டி அளவு தேன் சேர்த்து குடிக்கலாம். இதனையும் காலை, இரவு என இரண்டு முறை குடிப்பது நல்ல பலன் தரும்.
ஐந்து முதல் ஆறு துளசி இலைகள், சிறிதளவு சுக்கு ஆகியவற்றை ஒரு கப் அளவு தண்ணீரில் கொதிக்க வைத்து பாதியாக குறைந்த பின்னர் அதனை வடிகட்டி தேன் சேர்த்து குடிக்கலாம். இது இருமல், சளி, தொண்டை வலி ஆகியவற்றை குணப்படுத்தும்.
மேலும் இரவில் ஒரு ஸ்பூன் அளவு வெந்தய விதையை ஊறவைத்து காலை எழுந்தவுடன் அதை வடிகட்டி குடிக்க வேண்டும். இது உடல் சூட்டை சமநிலைப்படுத்தி சளியை கரைக்கும்.
இரண்டு ஸ்பூன் அளவு தேங்காய் எண்ணெய், சிறிதளவு சுக்கு மற்றும் மிளகுத்தூள் ஆகியவற்றை சேர்த்து வேக வைக்க வேண்டும். பின்னர் எண்ணெய் குளிர்ந்ததும் அதனை மார்பில் தடவலாம். இதன் மூலம் சளி வெளியேறும்.
இது தவிர உணவில் கவனம் செலுத்த வேண்டும். அதன்படி சூடான சூப், மிளகு மற்றும் மஞ்சள் சேர்த்த பால், மிளகு ரசம், பூண்டு குழம்பு போன்றவற்றை எடுத்துக் கொள்வது நல்லது. அதே சமயம் குளிர்பானங்களை தவிர்ப்பதும் முக்கியம்.
மேலும் மழைக்காலத்தில் தண்ணீரை சூடாக்கி குடிக்க வேண்டும். எட்டு மணி நேரம் தூக்கம் அவசியம். இருப்பினும் இது தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.


