குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பொதுவான பிரச்சனையாக இருப்பது மலச்சிக்கல். நம் உடலில் போதுமான அளவு நீர்ச்சத்து நார்ச்சத்து போன்றவை இல்லை என்றாலும் இந்த மலச்சிக்கல் பிரச்சனை உண்டாகும். எனவே நாம் அன்றாடம் உண்ணும் உணவுகளில் நீர் சத்தும் நார் சத்தும் இருக்க வேண்டியது அவசியம். அது மட்டும் இல்லாமல் மலச்சிக்கல் உண்டானால் ஓடி ஓடி மருந்துகளை வாங்கி சாப்பிடுகிறோம். மலச்சிக்கலை உணவின் மூலம் மாற்ற பாருங்கள் மருந்துகளை தேடாதீர்கள். எனவே பின்வரும் முறைகளைப் பின்பற்றி மலச்சிக்கல் பிரச்சனை உண்டாவதை தடுக்கலாம்.
தினமும் இரண்டு முதல் மூன்று லிட்டர் வரை தண்ணீர் குடிப்பது அவசியம். அதிலும் காலை எழுந்தவுடன் இளஞ்சூட்டில் நீர் பருகுவது சிறந்தது. இது மலச்சிக்கல் பிரச்சனையை குறைக்கும்.

அதே சமயம் தினமும் நம் உண்ணும் உணவுகளில் பச்சை காய்கறிகளை சேர்த்துக் கொள்வது அவசியம். அதன்படி பீன்ஸ், அவரைக்காய், கீரை வகைகள் போன்றவற்றில் நார்ச்சத்து அதிகம் உள்ளது.
தினமும் கீரை சாப்பிடுவதனால் மலச்சிக்கல் பிரச்சனையை தடுக்கலாம்.
மேலும் கொண்டக்கடலை, கோதுமை ஆகியவைகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
தினம் ஒரு வாழைப்பழம் சாப்பிடுவதால் மலச்சிக்கல் தீரும்.
வில்வத்தின் உள் சதையை சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வந்தால் நல்லது. அதுபோல விளாம்பழத்தின் உள் சதையை சக்கரை சேர்த்து சாப்பிடலாம்.
சர்க்கரை வள்ளி கிழங்கு மலச்சிக்கலை சரி செய்ய உதவுகிறது.
மேலும் உடலுக்கு எந்தவித வேலை கொடுக்காமல் இருந்தாலும் கூட நாம் உண்ணும் உணவுகள் விரைவில் செரிமானம் அடையாமல் மலச்சிக்கல் உண்டாகும். எனவே சோர்வின்றி உடலுக்கு வேலையை கொடுக்க வேண்டும். அதாவது உடற்பயிற்சி, நடை பயிற்சி மேற்கொள்ள வேண்டும். தினமும் அரை மணி நேரமாவது உடற்பயிற்சி அல்லது நடை பயிற்சி மேற்கொண்டால் எவ்வித நோயும் அண்டாமல் ஆரோக்கியமாக வாழலாம்.
இருந்த போதிலும் இம்முறைகளை சரியான முறையில் பின்பற்றுங்கள். இல்லையெனில் உடனடியாக மருத்துவரை அணுகுங்கள்.