தினமும் மூலிகை டீ அருந்தும் பழக்கத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள். ஏனென்றால் மூலிகை டீ குடிப்பதனால் உடல் உள்ளுறுப்புகள் ஆரோக்கியமாக இருப்பதோடு நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். தற்போது சிறந்த மூலிகை டீ வகைகளை பற்றி பார்க்கலாம்.
1. துளசி டீ
4 முதல் 5 துளசி இலைகளை எடுத்து அதை ஒரு கப் நீரில் போட்டு ஐந்து நிமிடம் கொதிக்க விடவும். இதில் தேவைப்பட்டால் சிறிது தேன் கலந்து குடிக்கலாம். துளசி டீ குடிப்பதனால் உடலில் உள்ள தொற்றுகளை எதிர்க்கும் சக்தி அதிகரிக்கும். மன அழுத்தம் குறையும். சளி, இருமல், காய்ச்சல் தீரும். ஹார்மோன்களை சமநிலையில் வைக்க இது உதவுகிறது.

2. இஞ்சி டீ
ஒரு இன்ச் அளவு இஞ்சி துண்டை எடுத்து நறுக்கி அதனை ஒரு கப் நீரில் போட்டு 5 முதல் 7 நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும். தேவைப்பட்டால் தேன் சேர்த்துக் கொள்ளலாம்.
இஞ்சி கலந்த மூலிகை டீயை தினமும் குடிப்பதனால் ஜீரண சக்தி அதிகரிக்கும். வாந்தி, தலைசுற்றல், வலி, வீக்கம் குறையும்.
3. மஞ்சள் டீ
மஞ்சளில் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் இருக்கிறது என்பதை அனைவரும் அறிந்ததே. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். அரை டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் ஒரு சிட்டிகை அளவு மிளகு எடுத்துக்கொண்டு அதனை ஒரு கப் நீரில் சேர்த்து காய்ச்சி குடிக்க வேண்டும். இதனையும் தேனுடன் சேர்த்து பருகலாம்.
4. நன்னாரி டீ
ஒரு ஸ்பூன் அளவு நன்னாரி வேர் தூள் அல்லது சாறு எடுத்துக்கொள்ள வேண்டும். இதனை ஒரு கப் வெந்நீரில் கலந்து சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும். அதன் பிறகு சிறிதளவு தேன் கலந்து பருகலாம். நன்னாரி டீ உடல் வெப்பத்தை குறைக்கும். வெயில் காலத்தில் சோர்வை தடுக்கும். சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்தும்.
5. வில்வ இலை டீ
இரண்டு முதல் மூன்று வில்வ இலைகளை எடுத்து ஒரு கப் நீரில் 5 நிமிடம் கொதிக்க விட வேண்டும். பின்னர் அதை வடிகட்டி பருக வேண்டும். ஜீரண சக்தியை அதிகரிக்கும். வயிற்றுப்போக்கு, அமிலம் போன்றவற்றுக்கு இது உகந்த மருந்தாகும்.
இது தவிர ஆவாரம்பூ, ரோஜா, செம்பருத்தி, வாழைப்பூ ஆகியவற்றை சம அளவில் எடுத்து தனித்தனியாக தண்ணீரில் அலசி நன்றாக காய வைக்க வேண்டும். பின்னர் இதனை மிக்ஸியில் சேர்த்து பொடியாக்கி மூலிகை டீ தூளாக பயன்படுத்தலாம்.
இருப்பினும் இது தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும். குறிப்பாக கர்ப்பிணிகள் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் இதனை பின்பற்றக் கூடாது.