மருத்துவ குணங்கள் நிறைந்த வெட்டிவேருக்கு எலுமிச்சை வேர் என்ற பெயரும் உண்டு. இந்த வெட்டிவேரானது நீர்க்கடுப்பு, வயிற்றுக் கடுப்பு, தோல் அரிப்பு, உடல் சோர்வு, ஜீரணக் கோளாறு போன்ற பிரச்சனைகளை குணமாக்குகிறது. அதுமட்டுமில்லாமல் தீக்காயங்களுக்கு கூட இந்த வெட்டிவேரானது சிறந்த மருந்தாக பயன்படுகிறது.
தற்போது வெட்டி வேரை எந்தெந்த நோய்களுக்கு எப்படி பயன்படுத்தலாம் என்பதை பார்ப்போம்.
1. வெட்டிவேரை நீரில் ஊற வைத்து அந்த நீரை தினமும் குடித்து வந்தால் சளி தொந்தரவு ஏற்படாமல் பாதுகாக்கலாம்.
2. வெயில் காலங்களில் உடலில் ஏற்படும் அரிப்பு , வியர்வை போன்றவற்றை தடுப்பதற்கு இந்த வெட்டிவேரை நீரில் ஊற வைத்து அரைத்து குளிக்க வேண்டும்.
3. காய்ச்சலுக்குப் பின் ஏற்படும் உடல் சோர்வுக்கு, வெட்டிவேரை நீரில் போட்டு கொதிக்க வைத்து குடிக்க வேண்டும்.
4. ஜீரணக் கோளாறுக்கும், வயிற்றுப் புண்ணுக்கும் இந்த வெட்டிவேரை நீரில் கொதிக்க விட்டு குடித்து வருவதால் நல்ல பலன் கிடைக்கும்.
5. சிறிதளவு வெட்டி வேரையும், கொட்டை நீக்கப்பட்ட கடுக்காய் ஒன்றையும் எடுத்து, அதனை முதல் நாள் இரவே வெந்நீரில் ஊற வைத்து , மறுநாள் அரைத்து அந்த விழுதை பருக்கள் இருக்கும் இடங்களில் தடவி வந்தால் பருக்கள் மறையும்.
6. கால் எரிச்சல், கால் வலி ஆகியவற்றை குணப்படுத்த வெட்டிவேரை தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி இரண்டு நாட்கள் கழித்து வடிகட்டிய பின் வலி இருக்கும் இடங்களில் தேய்த்து வந்தால் வலி குறையும்.
இந்த முறைகளை ஒரு முறை பின்பற்றி பார்த்துவிட்டு ஒவ்வாமை எதுவும் ஏற்படவில்லை என்றால் தேவைப்படும் சமயங்களில் பயன்படுத்தலாம்.