மெரினாவில் புயலால் பாதிப்படைந்த மாற்றுத்திறனாளிகளுக்கான பாதையை வல்லுனர்களை கொண்டு ஆய்வு செய்து, உறுதியான பாதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு உறுதியளித்துள்ளார்.
மூதறிஞர் ராஜாஜியின் பிறந்த நாளையொட்டி சென்னை பாரிமுனையில் அமைந்துள்ள அவரது சிலைக்கு அமைச்சர் சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு, எந்த அரசியல் கட்சியை சார்ந்தவர் என்ற நிலைப்பாடும் இல்லாமல் அனைவருக்கும் புகழ் சேர்க்கும் அரசாக தமிழகம் அமைந்துள்ளது என்றார்.
வருமுன் காப்பவன் தான் அறிவாளி என்ற ஒளவையார் வரிகளின் படி, வரும் முன் காக்கும் பணியை முதலமைச்சர் மேற்கொண்டுள்ளார் என சேகர்பாபு கூறினார். சென்னையில் மட்டும் முன்னெச்சரிக்கையாக 13,000 மரங்கள் கணக்கெடுக்கப்பட்டு பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது என அவர் தெரிவித்தார்.
சென்னை மாநகராட்சியின் 25,000 ஊழியர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் போக்குவரத்து தடையில்லாமல் உள்ளது என்றும் அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
சென்னை மெரினாவில் புயலால் பாதிப்பான மாற்றுத்திறனாளிகளுக்குரிய பாதையை வல்லுனர்களை கொண்டு ஆய்வு செய்து உறுதியான பாதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு உறுதியளித்தார்.