நாமக்கல் மாவட்டம் வெப்படையில் நடைபெற்ற அதிமுக ஆர்ப்பாட்டத்தில் திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகள், இதுவரை நிறைவேற்றவில்லை என முன்னாள் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் வெப்படை நான்கு வழி சாலை சந்திப்பில் அதிமுகவின் ஒன்றியத்தின் சார்பில் திமுக அரசின் சொத்து வரி, மின் கட்டண உயர்வு உள்ளிட்ட வரி உயர்வை கண்டித்து முன்னாள் அமைச்சர் தங்கமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சுற்று வட்டார பகுதி சேர்ந்த 500க்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் பங்கேற்று திமுக அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.

அதன்பின் தொண்டர்கள் மத்தியில் பேசிய முன்னாள் அமைச்சர் தங்கமணி, “திமுக அரசு தேர்தல் வாக்குறுதி கொடுத்த வாக்குறுதிகள் எதையும் இதுவரை முழுமையாக நிறைவேற்றவில்லை. மகளிர் குழுவினர் கல்விக் கடன் நகை கடன் உள்ளிட்ட தள்ளுபடி பல்வேறு திருத்தங்களை செய்து குறைந்த பணியாளர்கள் மட்டுமே பயன்பெறும் வகையில் செயல்படுத்தி இருக்கிறது. திமுகவின் சொத்து வரி, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு உள்ளிட்ட விலை உயர்வால் பொதுமக்கள் திமுகவிற்கு ஏன் வாக்களித்தோம் என்று தற்போது வருத்தப்பட்டு கொண்டிருக்கின்றனர்.
தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழல் இல்லாத ஆட்சி நடைபெற்று வருகிறது. நாள்தோறும் சட்ட ஒழுங்கு சீர்கேடு கெட்டுள்ளதற்கு தமிழ்நாடு காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு ஒப்புதல் அளித்திருப்பது போன்று அவரது அறிக்கை இருக்கிறது. திமுக அரசின் 19 மாத ஆட்சி விளைவு வரும் நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும்” என தெரிவித்தார்.