ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், இரு அணிகளாக களம் இறங்கும் அதிமுகவில், பாஜகவின் ஆதரவு யாருக்கு என்ற குழப்பம் தொடர்ந்து நீடிக்கிறது.


அடுத்த மாதம் 27 ஆம் தேதி நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக, ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் தனித்தனியாக களம் இறங்குகின்றன. அதிமுக ஈபிஎஸ் அணியில் வேட்பாளர் விருப்ப மனு பெறப்பட்டு வரும் நிலையில், ஈரோட்டில் அக்கட்சி நிர்வாகிகள் பூத் வாரியாக ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு பெரியார் நகரில் கட்சி நிர்வாகிகளுடன் முன்னாள் அமைச்சர்கள் கே ஏ செங்கோட்டையன், தங்கமணி, கருப்பணன் ஆகியோர் ஆலோசனை நடத்தினர். அதிமுகவில் இரட்டை இலை சின்னம் கிடைக்குமா என்ற குழப்பம் நீடித்து வருவதால், இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கு விருப்ப மனு அளிப்பதிலும் அக்கட்சி நிர்வாகிகளிடம் ஆர்வம் குறைந்து காணப்படுகிறது.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய கே.ஏ.செங்கோட்டையன், “அதிமுகவின் இரு அணிகளில் எந்த அணிக்கு பாஜக ஆதரவளிக்கும் என்பது தெரியவில்லை. பொறுத்திருந்து பாருங்கள். மெகா கூட்டணி அமைக்கப் போவதாக எடப்பாடி பழனிச்சாமி கூறியிருந்த நிலையில், தமாகவை தவிர மற்ற கட்சியினர் வெளிப்படையாக இதுவரை ஆதரிக்கவில்லை. அதனையும் பொறுத்திருந்து பாருங்கள். மக்களை இந்த தேர்தலில் சந்திக்க போகின்றோம். வெற்றி எங்களுக்கு என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மக்களிடம் மனமாற்றம் ஏற்பட்டுள்ளது; அதிமுக வெல்லும். இரட்டை இலை சின்னம் நமக்கு கிடைப்பது உறுதி. தேர்தல் களப்பணியை பொறுத்தவரையில் அதிமுகவை மிஞ்சுவதற்கு தமிழ்நாட்டில் யாரும் கிடையாது” எனக் கூறினார்.
