தமிழகத்தில் பாஜக ஆட்சியில் அமர வாய்ப்பே இல்லை- ராஜன் செல்லப்பா
பாரதிய ஜனதா கட்சி உள்ளிட்ட தேசிய கட்சிகளுக்கு தமிழகத்தில் உள் கட்டமைப்புகள் போதுமான அளவு இல்லை, எனவே ஆட்சியில் அமர வாய்ப்பே கிடையாது என அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார்.
மேலூர் அருகே திருவாதவூர் கிராமத்தில் அதிமுக உறுப்பினர் சேர்க்கை ஆய்வு கூட்டம் மதுரை கிழக்கு அதிமுக மாவட்ட செயலாளரும்,திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ராஜன் செல்லப்பா தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கிளைக் கழக நிர்வாகிகளுக்கு அதிமுக உறுப்பினர் படிவத்தினை வழங்கி தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய ராஜன் செல்லப்பா, தாலிக்கு தங்கம், அம்மா இருசக்கர வாகனம் போன்ற பல்வேறு நலத்திட்டங்களை திமுக அரசு கடந்த இரண்டு ஆண்டுகளாக செயல்படுத்தவில்லை, மதுரை புதூரில் உள்ள அம்மா உணவகத்தில் அப்பகுதி கவுன்சிலர் இரவு நேரத்தில் ஆம்லெட் விற்பனை செய்வதாக குற்றம் சாட்டினார். எனவே இது போன்ற காரணங்களால் திமுக அரசு மீது மக்களுக்கு அதிருப்தி அதிகரித்துள்ளதாகவும் அடுத்து வரக்கூடிய தேர்தலில் அதிமுக கிளை கழக உறுப்பினர்கள் அயராமல் உழைத்து அதிமுக வெற்றிக்கு பாடுபட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மதுரை கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளரும் திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா, “தமிழகத்தில் பாஜக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் போன்ற தேசிய கட்சிகளுக்கு கிராமங்கள் தோறும் கிளை கழகங்கள் முறையாக அமைக்கப்படவில்லை. இதனால் தேசிய கட்சிகள் தமிழகத்தில் காலூன்றி ஆட்சியைப் பிடிக்கும் என்பதெல்லாம் சாத்தியம் இல்லை, அதிமுக, திமுகவுடன் கூட்டணி அமைத்து மட்டுமே தேசிய கட்சிகள் தமிழகத்தில் செயல்பட முடியும்” என்றார்.