ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட உள்ளோம், பாஜக போட்டியிட்டாலும் ஆதரவு அளிப்போம் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.


ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக கூட்டணி கட்சிகளுடன் அதிமுக எடப்பாடி அணி போட்டியிட கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட உள்ளோம், பாஜக போட்டியிட்டாலும் ஆதரவு அளிப்போம். உள்ளாட்சி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் முடங்கவும் குழப்பம் ஏற்பட்டதற்கும் எடப்பாடி பழனிசாமி தான் காரணம். இரட்டை இலை சின்னம் முடங்க நான் காரணமாக இருக்க மாட்டேன்
அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பதே விருப்பம். ஒன்றுப்பட்டால் உண்டு வாழ்வு, பலமுறை இதை தெரிவித்துள்ளேன். அனைவரும் இதனை உணர வேண்டும். எடப்பாடி பழனிசாமி மற்றும் சசிகலா அணியுடனும் பேச்சுவார்த்தை நடத்த தயார். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை தற்போது வரை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டுள்ளது. சட்டப்போராட்டத்தை தொடர்வேன். கூட்டணி கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியிடாததால், கூட்டணியின் முக்கிய கட்சியான பாஜக இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவிப்பதும் தவறில்லை.
நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ளதால் பாஜகவுக்கு இடைத்தேர்தல் முக்கியமானது தான். இடைத்தேர்தல் குறித்து கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளேன்” எனக் கூறினார்.
