டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை எதிர்த்து புதுடெல்லி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார் பாஜக முன்னாள் எம்.பி பர்வேஷ் சாஹிப் சிங் வெர்மா சூடுபிடிக்கும் டெல்லி தேர்தல் களம்!!


டெல்லி சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் அட்டவணை வெளியிடப்படுவதற்கு முன்பே அரசியல் கட்சிகள் பலவும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி வருகிறது. டெல்லியில் ஆளும் கட்சியான ஆம் ஆத்மீ , தேசிய கட்சியான காங்கிரஸ் உள்ளிட்டவை வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு பிரச்சாரங்களை தொடங்கியுள்ள நிலையில் பாரதிய ஜனதா கட்சி இன்று 29 வேட்பாளர்கள் அடங்கிய முதல் கட்ட பட்டியலை வெளியிட்டுள்ளது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் , முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் , வேறு கட்சிகளில் இருந்து சமீபத்தில் பாஜகவில் இணைந்த உறுப்பினர்கள் என பலருக்கும் பாரதிய ஜனதா கட்சி வாய்ப்பு வழங்கியுள்ள நிலையில் டெல்லியின் முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை எதிர்த்து போட்டியிடும் பாஜக வேட்பாளரின் பெயரையும் வெளியிட்டுள்ளது. அதன்படி புதுடெல்லி சட்டமன்ற தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முன்னாள் முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிட உள்ள நிலையில் அத்தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பர்வேஸ் சாகிப் சிங் வெர்மா போட்டியிடுவார் என பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கடந்த ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த டெல்லியின் முன்னாள் அமைச்சர் அரவிந்தர் சிங் லவ்லி, காந்திநகர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவார் என வேட்பாளர் பட்டியலில் பாஜக தலைமை அறிவித்துள்ளது. 70 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட டெல்லியின் நட்சத்திர தொகுதிகள் பலவற்றுக்கும் வேட்பாளர்களை முக்கிய அரசியல் கட்சிகள் அறிவித்துள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
டெல்லி சட்டப்பேரவை தேர்தல்; பாஜக முதல்கட்டமாக 29 வேட்பாளர்கள் அறிவிப்பு


