ஆளுநர் பாணியில் நாங்கள் இறங்கினால், ஆளுநர் மாளிகை அவருக்கு சிறை கூடாரமாக மாறிவிடும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் பேசினார்.
மார்க்சியம் குறித்த தமிழ்நாடு ஆளுநர் ரவியின் பேச்சைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சென்னை சைதாப்பேட்டையில் கருப்புக் கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


அந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் உரையாற்றினார். அப்போது அவர் ஆளுநருக்கு தைரியம் இருந்தால், மார்க்சியம் குறித்த ஒரு பட்டிமன்றத்திற்கு வாருங்கள்
நாங்கள் விவாதிக்க தயாராக இருக்கிறோம். நாங்கள் அனுப்பி உள்ள “மார்க்ஸ்” கதை என்ற புத்தகத்தை படிக்க வேண்டும். அப்படியாவது உங்களது மரமண்ட புத்திக்கு ஏறி புரிந்து கொள்ள வாய்ப்பு இருக்கிறதா, என்று பார்ப்போம் என்றார்.

தமிழ்நாடு என்று சொல்ல மாட்டேன் என்று தமிழ்நாட்டை கொச்சைப் படுத்துகிறீர்கள் கேவலப்படுத்தினீர்கள். நீங்கள் இறங்கிய அதே பாணியில் நாங்கள் இறங்கினால், அதே பாணியில் இறங்க கட்டாயப்படுத்தினால், ஆளுநர் மாளிகை என்பது உங்களுக்கு சிறை கூடாரமாக மாறிவிடும் நிலை ஏற்படும்.
ஆளுநர் மாளிகை விட்டு நீங்கள் வெளியே வர முடியாது, வீதியில் பயணம் செய்ய முடியாது என்று காட்டமாக பேசினார்.
மேலும், நீங்கள் தெரிவித்து இருக்கிற இந்த கருத்துக்கு மறுப்பு தெரிவிக்கவில்லை என்றால் நான் சொன்னதை திரும்ப பெறுகிறேன் என்று நீங்கள் அறிவிக்கும் வரை தமிழகத்தில் நீங்கள் எந்த மூளைக்கு சென்றாலும் சரி எந்த குக்கிராமத்திற்கு சென்றாலும் சரி எந்த பட்டணத்துக்கு சென்றாலும் சரி அங்கு செங்கொடி இயக்கத்தை சார்ந்த தோழர்கள் கருப்பு கொடி போராட்டம் நடத்துவார்கள் என்று எச்சரிக்கைவிடுத்தார்.

மார்க்சியம் என்பது மனிதனை வாழ வைக்கின்ற ஒரு மகத்தான தத்துவம், இன்றைக்கு உலகில் சம உரிமைக்காக எவன் போராடினாலும் அந்த போராளிகளுக்கு உந்து சத்தியாக இருக்கக்கூடியது மார்க்சிய தத்துவம், என்பதனை பெருமையாக சொல்லிக்கொள்கிறோம் என்றார். இவ்வாறு பாலகிருஷ்ணன் பேசினார்.
