Homeசெய்திகள்அரசியல்கர்நாடக முதல்வர் சிவகுமாரை டெல்டா பகுதிக்கு அழைத்து வந்து கருகிய பயிர்களைக் காட்ட வேண்டும்: தமுமுக...

கர்நாடக முதல்வர் சிவகுமாரை டெல்டா பகுதிக்கு அழைத்து வந்து கருகிய பயிர்களைக் காட்ட வேண்டும்: தமுமுக தலைவர் ஜவாஹிருல்லா பேட்டி!

-

- Advertisement -

திருவாரூரில் செய்தியாளர்களைச் சந்தித்த மனிதநேய மக்கள் கட்சி மற்றும் தமுமுக மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லா பல்வேறு முக்கிய அரசியல் மற்றும் சமகாலப் பிரச்சினைகள் குறித்துப் பேட்டியளித்தார்.

ஜவாஹிருல்லா

we-r-hiring

காவிரி, மேகதாது விவகாரமும் கோரிக்கைகளும்

தஞ்சாவூரில் காவிரி மற்றும் மேகதாது அணை விவகாரத்தைக் கண்டித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ள மாபெரும் போராட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சியும் கலந்துகொள்ளும். கர்நாடக துணை முதலமைச்சர் சிவகுமாரை டெல்டா மாவட்டங்களுக்கு அழைத்து வந்து, இங்கு கருகியுள்ள பயிர்களின் நிலையை நேரில் பார்வையிடச் செய்ய வேண்டும்.

அதைவிட்டுவிட்டு முதலமைச்சர் விஜய் கர்நாடகத்திற்குச் செல்வது தேவையில்லாத செயலாகும். மேலும், குறுவை சாகுபடிக்கான பயிர் கடன் பிரீமியம் கட்டும் தேதியை தமிழ்நாடு அரசு ஜூலை 31-லிருந்து ஆகஸ்ட் 15 வரை நீட்டிக்க வேண்டும். டெல்டா மாவட்டங்களை வறட்சிப் பகுதிகளாக அறிவித்து, விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 25,000 ரூபாய் வறட்சி நிவாரணமாக வழங்க வேண்டும்.

வந்தே மாதரம் சர்ச்சை மற்றும் மின்கட்டண உயர்வு

ஆனந்தமடம் நாவலில் உள்ள வந்தே மாதரம் பாடலின் முதல் இரண்டு சரணங்களை மட்டுமே நேரு, படேல் தலைமையிலான தலைவர்கள் ஏற்க முடிவு செய்தனர். மற்ற சரணங்கள் ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிரானவை என்பதால் தேசிய கீதமாக ஜனகண மன தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆர்.எஸ்.எஸ். பின்புலத்துடன் பிரதமர் மோடி இதை கட்டாயமாக்குவது விடுதலைப் போராட்ட வீரர்களின் எண்ணத்தைச் சிதைப்பதாகும். இது தமிழ்த்தாய் வாழ்த்தைச் சிறுமைப்படுத்தும் செயலாகும். அதேபோல, மக்களிடையே அளவுக்கு அதிகமாக வந்துள்ள மின்கட்டண விவகாரத்தில் அரசு உடனடியாக விரிவான ஆய்வு செய்து, கூடுதலாக வசூலிக்கப்பட்ட தொகையைத் திருப்பிக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காவல் துறை செயல்பாடுகள் மற்றும் ஆவின் தட்டுப்பாடு

காவல் துறையினர் தண்டிக்கும் அதிகாரத்தைக் கையில் எடுத்தால் அது காட்டாட்சியாகிவிடும். தவறு செய்த காவல்துறை அதிகாரிகள் மீது உச்சபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும். தமிழ்நாட்டின் பொக்கிஷமான ஆவின் நிறுவனம் இன்று மிகப்பெரிய முடக்கத்தில் இருப்பது வருந்தத்தக்கது. அதைக் காப்பாற்றத் தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும். மேலும் குடிநீர் தட்டுப்பாட்டைத் தீர்ப்பது, உயிர்காக்கும் மருந்துகள் இருப்பை உறுதி செய்வது குறித்தும் அவர் தனது பேட்டியில் வலியுறுத்தினார்.

வெளிநாடுகளில் மருத்துவம் படித்த மாணவர்களுக்குப் பயிற்சி மறுப்பு: கீழ்ப்பாக்கத்தில் மருத்துவப் பட்டதாரிகள் முற்றுகைப் போராட்டம்!

MUST READ