அதிமுக நான்காகவும் பிரியவில்லை, மூன்றாகவும் பிரியவில்லை, 96 சதவீதம் பேர் எடப்பாடி பழனிச்சாமி பக்கம்தான் உள்ளனர் என முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் பவானியில் பால் விலை, மின்சார கட்டணம் மற்றும் சொத்து வரி உயர்வு கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் முன்னாள் அமைச்சரும் எம்எல்ஏவுமான கே.சி.கருப்பணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது உயர்த்தப்பட்ட கட்டணங்களை குறைக்க வலியுறுத்தி அவர், “ அதிமுக நான்காகவும் பிரியவில்லை, மூன்றாகவும் பிரியவில்லை, 96 சதவீதம் பேர் கழக உடன்பிறப்புக்கள், செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் ஒன்றிய செயலாளர்கள் என அனைவரும் எடப்பாடி பழனிச்சாமி பக்கம்தான் உள்ளனர்.

மீதமுள்ள நான்கு சதவீதம் பேர் அங்கு சென்றால் பணம் கிடைக்குமா இங்கு சென்றால் பணம் கிடைக்குமா என ஒவ்வொரு கட்சியாக மாறிக்கொண்டு இருக்கின்றனர்” எனக் கூறினார்.
மோடி சொல்லிவிட்டார் 2024 இல் ஒரே நாடு ஒரே இந்தியா ஒரே தேர்தல் வரும் என கூறியிருக்கிறார், அப்படி வரும் பட்சத்தில் இன்னும் ஒன்றை ஆண்டுகளில் இந்த ஆட்சி காணாமல் போய்விடும் என தெரிவித்தார்.
தொடர்ந்து சொத்துவரி பால் விலை மற்றும் மின்சார கட்டண உயர்வை கண்டித்து கோசங்கள் எழுப்பினர், இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்து கொண்டனர்.