முதலமைச்சரை அவதூறாகப் பேசியதாக திமுக எம்.எல்.ஏ.வை இரவோடு இரவாகக் கைது செய்தது தேவையற்ற நடவடிக்கை என்றும், இது முதலமைச்சர் மீதே எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.
![]()

திருத்தணி முருகனுக்கு 6 அடி வெள்ளிவேல் காணிக்கை!
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று மாலை திருத்தணி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். தனது வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் முருகப்பெருமானுக்கு 6 அடி உயரம் கொண்ட பிரம்மாண்ட வெள்ளிவேல் காணிக்கையாக வழங்கினார். தொடர்ந்து தங்கத் தேர் இழுத்து வழிபாடு செய்தார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் பிரேமலதா பேசிய முக்கிய அம்சங்கள்:
திமுக எம்.எல்.ஏ கைது:
“முதலமைச்சரை அவதூறாகப் பேசியதாக திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயனை இரவோடு இரவாக அதிரடியாகக் கைது செய்தது தேவையற்றது. இதுபோன்ற நடவடிக்கைகள் முதலமைச்சர் மீதுதான் எதிர்மறையான தாக்கத்தை (Negative Impact) ஏற்படுத்தும்.”
கோயில் நிலம் அபகரிப்பு & வசதிகள்:
பழனியில் ரூ.100 கோடி மதிப்புள்ள முருகன் கோயில் நிலம் அபகரிக்கப்பட்ட வழக்கில் தவறு செய்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும். அனைத்துக் கோயில்களிலும் குடிநீர் மற்றும் உணவுப் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும்.
எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா & குதிரை பேரம்:
சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வது குறித்து முதன்முதலில் குரல் கொடுத்தது நான் தான். எதைப் பார்த்து இவர்கள் ராஜினாமா செய்கிறார்கள்? பின்னணியில் குதிரை பேரம் நடக்கிறதா? பணம் மற்றும் பதவியைப் பார்த்து எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செய்கிறார்களா என்ற கேள்வி ஒட்டுமொத்த தமிழக மக்களிடமும் எழுந்துள்ளது.
மின்வெட்டு & மின்கட்டண உயர்வு:
தமிழகத்தில் தொடர்ந்து நிலவும் மின்வெட்டைக் கட்டுப்படுத்த வேண்டும். அறிவிக்கப்படாத மின்கட்டண உயர்வை முதல்வர் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.
விவசாயிகள் கடன் தள்ளுபடி:
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும். இதன் மூலம் ‘ரீல் லைப்பில்’ சொன்னதை ‘ரியல் லைப்பில்’ முதல்வர் நிரூபித்துக் காட்ட வேண்டும்.
மேலும், டெல்லியில் மத்திய கல்வி அமைச்சருக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களின் உணர்வுகளை மத்திய, மாநில அரசுகள் மதித்துச் செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
