spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்தமிழ்நாட்டு அரசியலில் காலூன்ற முடியாத சனாதன சக்திகளின் சதி அரசியல்... திருப்பியடிக்கும் திருமாவளவன்..!

தமிழ்நாட்டு அரசியலில் காலூன்ற முடியாத சனாதன சக்திகளின் சதி அரசியல்… திருப்பியடிக்கும் திருமாவளவன்..!

-

- Advertisement -

சனாதன சக்திகளின் சதி அரசியலை முறியடிப்போம் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், ‘‘அண்மைக் காலமாகத் தமிழ்நாட்டில் தந்தை பெரியாருக்கு எதிரான அவதூறுகள் பெருமளவில் திட்டமிட்டுப் பரப்பப்பட்டு வருகின்றன. குறிப்பாக, பெரியாரின் சாதி ஒழிப்புக் கருத்தியலில், சமூகநீதி அரசியலில் உடன்பாடில்லாத சனாதன சங்கப் பரிவாரங்கள் இத்தகைய பரப்புரைகளைச் செய்து வருகின்றன. அதற்கு முதன்மையான காரணம் தமிழ்நாட்டு அரசியலில் அவர்களால் காலூன்ற இயலாத இறுக்க நிலையே ஆகும்.

இம்மண்ணில் அவர்கள் வேரூன்றுவதற்குப் பெரும் தடையாக இருப்பது பெரியாரின் சமத்துவச் சிந்தனைகள் தான் என்பதால், பெரியார் மீதான நன்மதிப்பை நொறுக்கிட வேண்டுமென்கிற கிரிமினல் உத்தியைக் கையாண்டு வருகின்றனர். அதனால் அவர்மீது ஆதாரமில்லாத அவதூறுகளைப் பரப்புகின்றனர். அத்துடன், பெரியாரின் கொள்கைகளைப் பேசும் இயக்கங்களைக் குறிவைத்து கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இவ்வாறு தமிழ்நாட்டு அரசியலில் தொடர்ந்து பதற்றத்தையும் குழப்பங்களையும் உருவாக்கி அதன் அமைதிச் சூழலை சீர்குலைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.பெரியார் மீது அவதூறு பரப்புவது தமிழ் இனத்திற்கும் செய்யும் துரோகம் - தொல். திருமாவளவன் பேச்சு

we-r-hiring

இத்தகைய சதி வேலைகளில் சங் பரிவார்கள் நேரடியாக மட்டுமின்றி, மறைமுகமாகவும் ஈடுபட்டுவருகின்றனர். சாதி, மதம் மற்றும் மொழி, இன அடையாளங்களின் பெயர்களில் இயங்கும் அமைப்புகளின் பின்னால் ஒளிந்துகொண்டு இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
சனாதன சக்திகள் பேசும் பிற்போக்கு அரசியலுக்குத் துணைநிற்கும் வகையில், இவர்கள் சமூகநீதி கோட்பாட்டு அரசியலின் அடையாளமாக விளங்கும் தந்தை பெரியாருக்கு எதிரான தாக்குதல்களில் தொடர்ந்து ஈடுபட்டுவருகின்றனர். எனவே, தமிழ்நாட்டு மக்கள் இத்தகையோரை அடையாளம் கண்டு அவர்களின் சனாதன ஃபாசிச அரசியல் சதிகளை முறியடிக்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

முத்தமிழறிஞர் கலைஞர், செல்வி ஜெயலலிதா ஆகியோரின் மறைவுக்குப் பிறகு தமிழ்நாட்டைக் கைப்பற்றி விடலாம் என்று கனவு கண்ட சனாதனப் பாசிசவாதிகள், அக்கனவு நிறைவேறாத நிலையில் தற்போதைக்குத் திராவிடக் கட்சிகளுள் ஒன்றான அதிமுகவைப் பலவீனப்படுத்தி, தாங்களே தமிழ்நாட்டில் இரண்டாவது பெரிய சக்தி என நிலைநாட்ட முயற்சிக்கின்றனர்.

அத்துடன், ஆளுங்கட்சியான திமுக மற்றும் அதன் தலைமையிலான கூட்டணி கட்சிகளை எதிர்வரும் 2026-சட்டப் பேரவை பொதுத் தேர்தலில் வீழ்த்திட வேண்டும் என்கிற வெறியுடன் செயல்படுகின்றனர். ஆதலால், தமிழ்நாட்டின்மீது பல்வேறு முனைகளிலிருந்து தாக்குதலை தொடுத்துள்ளனர்.

அதாவது, தமிழ்நாடு அரசுக்கு அளிக்க வேண்டிய நிதியைத் தராமல் மறுப்பது; மாநில உரிமைகளைப் பறிப்பது ; ஆளுநர் மூலம் தமிழ்நாடு அரசைச் செயல்பட விடாமல் முடக்குவது போன்ற நெருக்கடிகளின் மூலம் தமிழ்நாட்டின் மீது பல்வேறு தாக்குதல்களை நடத்துகின்றனர்.

அத்துடன், திராவிட அரசியல் எதிர்ப்பு சக்திகளை ஏவி, எளிய மக்களின் கவனத்தைத் திசை திருப்புவது, சமூகநீதி அரசியலுக்கான வாக்கு வங்கியைச் சிதறடிப்பது என தொடர் தாக்குதலைத் தொடுத்து வருகின்றனர். எனினும், திராவிடக் கருத்தியலின் ஓர்மை மற்றும் சனநாயக சக்திகளின் ஒற்றுமை ஆகியவற்றின் காரணமாக சனாதனிகளின் பித்தலாட்டங்கள், சூது- சூழ்ச்சிகள் இங்கே எடுபடவில்லை. எனவே, அந்தக் கருத்தியல் ஓர்மையையும் ஒற்றுமையையும் சிதைக்கும் நோக்கில் தந்தை பெரியாருக்கு எதிராக அவதூறுகள் பரப்புவது, அதன் மூலம் பொதுமக்களிடையே பகைமூட்டிச் சட்டம் ஒழுங்குப் பிரச்சனையை ஏற்படுத்துவது போன்ற அரசியல் தந்திரங்களைக் கையாளுகின்றனர்.

ஆரிய சனாதனத்தின் அடிப்படையாக இருப்பது பிறப்பின் அடிப்படையிலான ஏற்றத் தாழ்வு என்னும் பாகுபாடே ஆகும். அதற்கு நேர் எதிராக சமத்துவத்தை முன்மொழிந்தது தான் தந்தை பெரியாரின் சிந்தனையாகும். அதாவது, சாதி ஒழிப்பே அவரது சிந்தனைகளின் அடிப்படையாகும். சாதி ஒழிப்பு என்னும் இலக்கே தந்தை பெரியாரையும், புரட்சியாளர் அம்பேத்கரையும் ஒருங்கிணைக்கும் கருத்தியல் புள்ளி ஆகும்.

அத்தகைய சாதி ஒழிப்பையும், சமூக நீதியையும், பகுத்தறிவு சிந்தனையையும் முன்னிறுத்தி தனது இறுதிமூச்சு வரையில் தீவிரமாகக் களமாடிய தந்தை பெரியாரை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
ஒருபுறம் தந்தை பெரியாரை எதிர்த்து அவதூறு செய்து கொண்டே இன்னொரு புறம் அவரைப்போலவே சனாதனத்தை எதிர்த்துப் போராடிய புரட்சியாளர் அம்பேத்கரையும் அயோத்திதாசப் பண்டிதரையும் மாவீரன் ரெட்டைமலை சீனிவாசனையும் தங்களுக்கானவர்கள் என தம்வயப்படுத்த அவர்கள் முயற்சிக்கின்றனர். இது எளிய மக்களை ஏமாளிகளாக்கும் சூழ்ச்சி மிகுந்த தந்திரமேயாகும். அத்துடன், சனாதன ஆதிக்கத்துக்குத் தமிழ்நாட்டின் அனைத்துக் கதவுகளையும் திறந்து விடும் துரோகமாகும்.

இந்நிலையில், தமிழ்நாட்டின் மீது பலமுனைத் தாக்குதலைத் தொடுத்திருக்கும் சனாதன ஃபாசிச சக்திகளையும் அவர்களுக்குத் துணைபோகும் பிற்போக்கு சக்திகளையும் அடையாளம் கண்டு அவர்களை அம்பலப்படுத்துவோம்!

சமத்துவம், சமூக நீதி ஆகியவற்றின் அடிப்படையிலான புரட்சியாளர் அம்பேத்கர் – தந்தை பெரியார் ஆகியோரின் முற்போக்கான அரசியலை நிலைப்படுத்துவோம்’’ என அவர் தெரிவித்துள்ளார்.

 

MUST READ