அமித்ஷாவின் சூழ்ச்சி வலையில் எடப்பாடி பழனிசாமி சிக்கியுள்ளார் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். அதிமுகவில் உள்ள அனைத்து அணிகளையும் கட்டுப்படுத்தக்கூடிய ஒரே நபர் டெல்லியில் உள்ள அமித்ஷா. அவருக்குத்தான் அவர்கள் கட்டுப்பட்டு இருப்பார்கள். அவரின் கட்டுப்பாட்டில் தான் இன்று ஒட்டுமொத்த அதிமுகவும் உள்ளதாகவும் உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் மீண்டும் ஆட்சிக்கட்டிலில் ஏற திமுக முயற்சி செய்து வருகிறது. 200 சீட்களில் வெல்ல வேண்டும் என்ற இலக்குடன் முதலமைச்சர் ஸ்டாலினும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் தமிழகத்தை வலம் வரத் தொடங்கியுள்ளனர். திமுக நிர்வாகிகளை சந்தித்து தேர்தலை எதிர்கொள்வதற்கான ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூரில் நேற்று நடந்த திமுக சார்பு அணிகள் ஆலோசனை கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார் அப்போது பேசிய அவர், திமுகவில் 25 அணிகள் உள்ளன. ஆனால் அதிமுகவின் நிலையோ, அவர்களின் கட்சியே 25 அணிகளாக பிரிந்து கிடக்கிறது. நமது கொள்கை கடமை, கண்ணியம், கட்டுபாடு இதுதான் திமுகவின் அடையாளம்.
ஆனால் அதிமுகவில் பார்த்தால் யாரும் எடப்பாடி பழனிசாமிக்கு கட்டுப்படுவது கிடையாது. அவருக்கு கண்ணியமாக இருப்பது கிடையாது. அதிமுகவில் உள்ள அனைத்து அணிகளையும் கட்டுப்படுத்தக்கூடிய ஒரே நபர் டெல்லியில் உள்ள அமித்ஷா. அவருக்குத்தான் அவர்கள் கட்டுப்பட்டு இருப்பார்கள். அவரின் கட்டுப்பாட்டில் தான் இன்று ஒட்டுமொத்த அதிமுகவும் உள்ளது. அமித்ஷாவின் சூழ்ச்சி வலையில் இன்று எடப்பாடி பழனிசாமி சிக்கியுள்ளார்.
எல்லா வகையிலும் பாஜவுக்கு சவாலாக உள்ளவர் இந்தியாவிலேயே முதல்வர் மு.க.ஸ்டாலின் மட்டும் தான். 10 நாட்களுக்கு முன்னர் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா மதுரைக்கு வந்தார். திமுக ஆட்சியில் மிகப்பெரிய ஊழல் நடப்பதாக கூறினார். ஊழலால் தண்டிக்கப்பட்ட அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ள கட்சியின் தலைவர் கூறியுள்ளார்.
ஊழலால் பலமுறை தண்டிக்கப்பட்டவர்கள் அதிமுகவினர். அவர்களுடன் கூட்டணி வைத்துவிட்டு நமது கட்சியை பற்றி கூறுகின்றனர்.. நாம் ஒவ்வொரு அணியாக சரியாக திட்டமிட்டு அதிமுக, பாஜ கூட்டணியை வீழ்த்த வேண்டும். சிவகங்கை மாவட்டத்துக்கு உட்பட்ட 4 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற வேண்டும் என்றும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.