தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என நேற்று தவெக தலைவர் விஜய் அறிவித்திருந்தார். அதன்படி, இன்று வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவைத் திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் தவெகவினர் நடத்தும் முதல் போராட்டம் இது.

விஜய் களத்திற்கு வந்து அரசியல் செய்யவேண்டும் என பலரும் விமர்சித்து வருகின்றனர். அவர் ஒர்க் ஃப்ரம் ஹோம் அரசியல் செய்வதாக கூறி வருகின்றனர். இதுவரை செய்தியாளர்கள் சந்திப்பைக்கூட அவர் நடத்தியதில்லை, மேடையில் மட்டும் யாரோ எழுதிக் கொடுத்ததை மனப்பாடம் செய்து டயலாக் பேசுகிறார் என்றெல்லாம் அவர் மீது கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
ஆனால், விஜய் இதையெல்லாம் சட்டை செய்வதாகத் தெரியவில்லை. இன்று போராட்டம் நடத்தப்படும் என்று நேற்றே அறிவித்து இருந்தார். அதனை ஏற்று தவெக தொண்டர்கள் தமிழகம் முழுவதும் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால், விஜய் வெளியில் தலைகூடக் காட்டவில்லை. அவர் ஜனநாயகன் படத்தின் ஷூட்டிங்கை முடித்துவிட்டு அவரது பனையூர் பங்களாவில் ஓய்வெடுத்து வருவதாகக் கூறப்படுகிறது.
இதனை அறிந்த தவெக தொண்டர்கள், நாமெல்லாம் வெயிலில் காய்ந்து போராட்டம் நடத்தி வருகிறோம். விஜயி வீடில் ஓய்வெடுத்து வருகிறார். இன்னும் தேர்தலுக்கு ஓராண்டு காலமே உள்ளது. இவர் ஒர்க் ஃப்ரம் ஹோம் அரசியல் நடத்தினால் எப்படி இவரை நம்பி கட்சியில் தொடர்வது? ஓடுகிற குதிரை என்று நினைத்து அவர் பின்னால் சென்றால் தான் மண் குதிரை என்பதை உணர்த்தி வருகிறார்.
ஜெயலலிதாவாவது வெற்றிபெற்ற பின் கோடநாடு சென்று அங்கிருந்து அரசியல் நகர்வுகளை முன்னெடுத்து வந்தார். ஆனால், இப்போதுதான் விஜய் கட்சி ஆரம்பித்துள்ளார். இவர் கோடநாடு வெர்சன் 2வாக இருந்து வந்தால் எப்பட? என தொண்டர்கள் கடுப்பாகி வருகின்றனர்.