பரசுராமனை பாமகவின் இளைஞர் அணித் தலைவராக அறிவித்தார் ராமதாஸ். அதற்கு பாமக தலைவர் அன்புமணி மேடையிலேயே கடும் எதிர்ப்புத் தெரிவித்தார்.
அவன் (முகுந்தன்) கட்சியில் இணைந்து 4 மாதங்கள்தான் ஆகிறது. அவனுக்கு இளைஞரணித் தலைவர் பதவியைக் கொடுத்தால் எப்படி? என்ன அனுபவம் உள்ளது அவனுக்கு? நல்ல அனுபவசாலியான நபரை பதவிக்குக் கொண்டு வாருங்கள். களத்தில் திறமையான ஆட்கள் வேண்டும். கட்சியில் இணைந்தவுடன் பொறுப்பு கொடுத்தால் எப்படி? என எதிர்ப்புத் தெரிவித்தார் அன்புமணி.

இதனால் கடுப்பான ராமதாஸ், ‘‘யாரா இருந்தாலும் நான் சொல்றத கேட்கணும். இது நான் உருவாக்கின கட்சி. நான் சொல்றத கேட்காதவங்க யாரும் இந்தக் கட்சியில இருக்க முடியாது. மறுபடியும் சொல்றேன் மாநில இளைஞரணித் தலைவரா முகுந்தனை நியமிக்கிறேன்.
இதை யாரும் மாற்ற முடியாது. உனக்கு விருப்பம் இல்லைனா, வேறு என்ன சொல்றது? விருப்பமில்லாத யாராக இருந்தாலும் கட்சியில இருந்து விலகிக் கொள்ளலாம். இது நான் உருவாக்குன கட்சி. நான் சொல்றதைத்தான் கேட்கணும். விருப்பம் இல்லாதவங்க கட்சியை விட்டு வெளியே போகலாம்’’என்றார்.
முகுந்தனுக்காக மகன் அன்புமணியையே ராமதாஸ் தூக்கி எறிய முயற்சிக்கிறார். சரி யார் இந்த முகுந்தன்? பாமக நிறுவனர் ராமதாஸின் மூத்த மகள் ஸ்ரீகாந்தி -பரசுராமன் தம்பதியினரின் மூன்றாவது மகன் முகுந்தன். பொறியியலில் பட்டம் பெற்றவர். ஐடி துறையில் பணியாற்றியவர். தற்போது பாமகவில் ஊடகபேரவை மாநில செயலாளராக இருக்கிறார்.
முன்னதாக ஜி.கே.மணியின் மகன் தமிழ்குமரன் இளைஞரணி தலைவர் பதவியிலின் இருந்தார். தமிழ்குமரன் பதவி விலகிய நிலையில் புதிய தலைவராக முகுந்தனை ராமதாஸ் அறிவித்தார். முகுந்தன் பரசுராமனுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஊடக பேரவை மாநில செயலாளராக பதவி வழங்கப்பட்டது.

இப்போது இளைஞரணித் தலைவராக நியமிப்பதாக ராமதாஸ் முகுந்தனை அறிவித்துள்ளதற்கு அன்புமணி எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
அன்புமணி-ராமதாஸ் இடையே உருவாகியுள்ள இந்த மோதல் ‘‘
ஒரு குடும்பத்திற்குள் நடப்பது. இருவரும் உரிமையில் பேசிக் கொள்கிறார்கள். அய்யா, சின்னய்யா வீட்ல கலந்து பேசி நல்ல முடிவு எடுப்பாங்க” எனக் கூறுகிறார்கள் பாமகவினர்.
இதுகுறித்து பாமக எம்.எல்.ஏ அருள் கூறுகையில் “ராமதாஸ் – அன்புமணி இடையே கருத்து வேறுபாடு எதுவும் இல்லை. இப்போது வெளிப்பட்டது சலசலப்புதான். இன்றைக்குள் எல்லாம் சரியாகிவிடும்” எனத் தெரிவித்துள்ளார்.


